பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/281

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வணக்கத்துக்குரியவள்

599

பாராட்டுவதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். "என்னிடம் ஒன்று இருக்கும்போது, உன்னிடம் இன்னொன்று எதற்கு?" என்று சொல்லிக்கொண்டே கவிஞர் காஞ்சிவாணன் கடிதமும் கையுமாக அங்கே வந்து நின்றார்.

"நீங்களா!"

எதிர்பார்க்கப்பட்டவர்கள் என்றாலும் அந்த நேரத்தில் அவரை எதிர்பார்க்கவில்லையாதலால், இந்தக் கேள்வி வியப்பின் மிகுதியால் அவளுடைய இதய அந்தரங்கத்திலிருந்து எழுவது போல் மெல்ல எழுந்தது.

உண்மை இதுதான் என்றாலும், கவிஞர் அந்தக் கண் கொண்டு அதை நோக்கவில்லை; அதற்கு மாறாகத் தமக்கே உரித்தான கற்பனைக் கண் கொண்டு நோக்கினார். அந்த நோக்கில் அது அன்னாருக்கு வேறு விதமான பொருளைக் கொடுக்கவே, "ஆம் அமுதா, நானேதான்!" என்றார் அவரும் அதே தொனியில்.

ஆனால், அதில் வியப்புத் தொனிக்கவில்லை. அதற்குப் பதிலாக தம்மையும் அறியாமல் தன் நோய்க்குக் காரணமாகிவிட்ட அவள் - அன்றே, அந்தக் கணமே அதற்கு மருந்தாகவும் ஆகிவிடுவாள் என்ற அவசர உணர்வுதான் தொனித்தது.

அவர் கண்ட இந்த ‘வள்ளுவன் வழி'யை உணராத அவளோ, "இந்த நேரத்திலா?" என்றாள் மீண்டும்.

"ஆம்; அம்மாகூடத் தூங்கிவிட்டார்களே, பார்க்கவில்லையா நீ? வா, என் அருகில் வா! இத்தனை நாளும் அந்தப் பாழும் நிலவு உன்னைச் சுட்டதெல்லாம் போதும், வா, என் அருகே வா!"

அவருடைய வேகம் அவருக்கு; அந்த வேகத்தை உணராத அவளோ, "நிலவு என்னைச் சுடவில்லை; நீங்கள் தான் என்னைச் சுடுகிறீர்கள்!" என்றாள் நிதானமாக.

"நானா, உன்னை சுடுகிறேனா இருக்காதே? இந்த நேரத்தில் உனக்கு நான் இளைப்பாறும் ஓடையாக இனிய நிழல் தரும் தருவாகவல்லவா தோன்ற வேண்டும்?"

"தோன்றும் தோன்றும், அதெல்லாம் உங்கள் கவிதையில் தோன்றும்; வாழ்க்கையில் தோன்றாது!"

"வாழ்க்கை வேறு; கவிதை வேறா என்ன?"

"ஆம், உண்மை வேறு; கற்பனை வேறு என்று இருப்பது போல வாழ்க்கை வேறு, கவிதை வேறுதான்!"

"அதெல்லாம் இந்தக் கடிதத்துக்கு முன்னால் உண்மையா யிருக்கலாம். இப்போது கணவன் காட்டிய வழியில் நிற்கக்-