பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/282

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

600

விந்தன் கதைகள்

கடமைப்பட்டவள் நீ; நண்பன் காட்டிய வழியில் நிற்கக் கடமைப்பட்டவன் நான்!"

"இருக்கலாம்; ஆனால் தமக்குப் பிறகு அல்லவா தாம் காட்டிய வழியில் அவர் நம்மை நிற்கச் சொல்லியிருக்கிறார். அதற்குள் அவசரப்படுகிறீர்களே, நீங்கள்! கிணற்றுத் தண்ணியை வெள்ளமா கொண்டுபோய்விடப் போகிறது?"

"ஆஹா! இதைக் கொஞ்சம் இங்கிதமாக அப்போதே சொல்லியிருந்தால் எப்போதே நான் இந்த இடத்தை விட்டுப் போயிருப்பேனே?"

அவர் நழுவினார். அவளைக் கொஞ்சம் 'விட்டுப் பிடிக்கும்' நோக்கத்துடன். அவளோ, அவருடைய கையிலிலுள்ள கடிதத்தைத் தட்டிப் பறிக்கும் நோக்கத்துடன், "அந்தக் கடிதத்தை இப்படிக் கொடுங்கள்!" என்றாள். அதற்கென்றே தன் குரலை மீட்டிய வீணையாக்கி.

அவரா அதற்கெல்லாம் அசைந்து கொடுப்பார்? "இதில் மட்டும் அப்படி விசேஷமாக என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை; உனக்கு என்ன எழுதியிருக்கிறானோ, அதையேதான் இதிலும் எழுதியிருக்கிறானாம்" என்றார் அவர், தம் நடைக்குச் சற்றே வேகம் கொடுத்து.

ணவாழ்க்கையில் வெற்றி கண்டவர்களைவிட தோல்வி கண்டவர்கள் தான் உலகத்தில் அதிகமாக இருக்கிறார்களல்லவா? அவர்களில் ஒருவர் கவிஞர் காஞ்சிவாணன். 'முறைப் பெண்' என்பதற்காக அவர் பெற்றோர் 'காத்தாயி' என்னும் திருநாமம் பூண்ட. ஒரு கிராமத்துக் கட்டழகியை அவருடைய தலையிலே கட்டிவைக்க, அந்தக் கட்டழகி முதல் நாள் இரவு அவரைச்சந்தித்தபோது, "ஆமாம், நீங்கள் பாட்டு மட்டும்தான் பாடுவீர்களா? இல்லே, கூத்தும் ஆடுவீர்களா?" என்று 'பிரேக் மாஸ்டர்' போல் ஓர் உரசு உரசிக்கொண்டே நீட்டி முழக்கிக் கேட்க, "அட, கர்மமே! ஒரு கவிஞனுக்கா இப்படி ஓர் அழகி?" என்று அடுத்த நாளே, 'கூறாமல் சந்நியாசம் கொண்டு' அந்த கிராமத்தை விட்டே ஓடி வந்துவிட்டார் அவர்!

வந்த இடத்தில்தான் ஆனந்தனின் சிநேகம் மட்டுமல்ல; அவன் மனைவி அமுதாவின் சிநேகமும் அவருக்குக் கிடைத்தது. அவன் அதுவரை "அண்ணா, அண்ணா!" என்று வளைய வந்தாலும் அவள் மட்டும் "உங்களுடைய கவிதையைத்தான் என்னால் ரஸிக்க-