பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/289

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூன்று பொம்மைகள்

607


"அட., பாவி! வீட்டில் இத்தனை பேர் இருந்தும் அவன் வரும்போது ஒருவர் கூடவா விழித்துக் கொள்ளவில்லை?"

"ஏன் விழித்துக் கொள்ளவில்லை, நான் விழித்துக் கொண்டேனே!" என்றான் பையன்.

"உண்மையாகவா?" என்றார் அப்பா.

"ஆமாம்ப்பா ! திருடனும் தீயோன்தானே, அவனைக் கண்டதும் நான் கண்ணை மூடிக் கொண்டு விட்டேன்!"

"அப்புறம்?"

"அவன், 'கத்தினால் கழுத்தை நெரித்துவிடுவேன்!' என்றான்; தீயோன் சொல்லைக் கேட்கலாமா? கேட்டவரை போதுமென்று காதைப் பொத்திக் கொண்டு விட்டேன்!"

"அட, கடவுளே! இதையெல்லாம் ராத்திரியே நீ ஏண்டா என்னிடம் சொல்லவில்லை?"

"சொல்லலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் 'தீயார் குணங்கள் உரைப்பதும் தீதே!' என்று மூன்றாவது பொம்மை சொன்னதால் வாயையும் பொத்திக் கொண்டு விட்டேன், அப்பா! என்றான் பையன்!