பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/292

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

610

விந்தன் கதைகள்

போய்விடும்' என்று அவள் தன் பையைத் திறந்து ஏதோ ஒரு பொடியை எடுத்துக் கொடுத்து, 'ஒரு தட்டு நிறைய நெருப்பை அள்ளிக் கொள்; அந்த நெருப்பில் இந்தப் பொடியைப் போடு, குபுகுபு வென்று புகை வரும், அந்தப் புகையைக் குதிரைக்குக் காட்டு; ராஜகுமாரனாகி விடும்!' என்று சொல்லிவிட்டுப் போனாளாம். அவள் சொன்னபடியே ராஜகுமாரி செய்ய, குதிரை அழகான ராஜகுமாரனாகி விட்டதாம்....!"

"ரொம்ப சந்தோஷமாயிருந்திருக்குமே, ராஜகுமாரிக்கு...?"

"அதுதான் இல்லை; அந்த ராஜகுமாரன் என்ன சொன்னானாம், தெரியுமா? 'ஐயோ பெண்ணே, மோசம் போனாயா!' என்றானாம். 'எது மோசம் குதிரையாயிருந்த உங்களை ராஜகுமாரனாக்கியதா மோசம்?' என்று திடுக்கிட்டுக் கேட்டாளாம் ராஜகுமாரி. 'ஆமாம் பெண்ணே , ஆமாம். குதிரையாயிருந்தாலும் நான் எப்போதும் உன்னுடன் இருந்து கொண்டிருப்பேன், இனி அப்படி இருக்க முடியாது, என்னால்!' என்றானாம் அவன், 'ஏன்?' என்று கேட்டாளாம் அவள், 'பொறுத்திருந்து பார்!' என்று அவன் சொல்ல 'இதென்ன தொல்லை?' என்று அவள் அன்றிரவு பூராவும் தூக்கம் பிடிக்காமல் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாளாம். மறுநாள் பொழுது விடிந்ததும் அந்தக் குறத்தி வந்து "என்ன, ராஜகுமாரி! எப்படி இருக்கிறான் ராஜகுமாரன்?" என்று அவளை விசாரித்தாளாம். அவன் சொன்னதை அவளிடம் சொன்னாளாம் ராஜகுமாரி. 'கவலைப்படாதே! உன்னுடைய பெயர் என்ன என்று நீ அவனைக் கேள்; அதைச் சொன்னதும் அவன் அப்படிப் பிதற்றுவதையெல்லாம் விட்டு விட்டு உன்னுடன் சந்தோஷமாக இருப்பான்!" என்று சொல்லிவிட்டுப் போனாளாம் குறத்தி. அவள் சொன்னபடியே அன்று மாலை நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்த போது, 'உங்களுடைய பெயர் என்ன?' என்று பேச்சோடு பேச்சாக ராஜகுமாரனைக் கேட்டாளாம், ராஜகுமாரி. 'அதை மட்டும் கேட்காதே; என்னை நீ இன்றே இழந்து விடுவாய்!' என்று அவன் அவளை எச்சரித்தானாம். அவன் சொன்னதை அவள் கேட்டிருக்கக் கூடாதா? - அதுதான் இல்லை; 'சொன்னால்தான் ஆச்சு!' என்று ஒரே பிடிவாதம் பிடித்தாளாம். 'சரி நடப்பது நடக்கட்டும்' என்று அந்த ராஜகுமாரன் 'என் பெயர் ஜம்பு ராஜா!' என்று சொல்லி விட்டானாம் - அவ்வளவுதான்; பரியாயிருந்த அவன் உடனே நரியாகி, ஊளையிட்டுக் கொண்டே ஓடினானாம், காட்டுக்கு! - அங்கே போய்ப் பார்த்தால் அந்த நரியுடன் விளையாடிக் கொண்டிருந்தது யார் என்கிறாய்? ராஜகுமாரிக்குக் குறி சொல்ல வந்த குறத்தி....!"