பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/293

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுகதை மன்னன் பெற்ற செல்வம்

611

கதை இப்படியாகப் போய்க்கொண்டே இருக்கும்; அவ்வளவு சீக்கிரம் முடியாது -அதற்காகத் தூக்கம் வராமல் இருக்குமா, என்ன? - வந்துவிடும்; இருவரும் தூங்கிவிடுவார்கள்!

இந்த வழக்கத்துக்கு விரோதமாக ஒரு நாள் இரவு பாட்டியைக் காணவில்லை - எப்படி இருக்கும், பேரனுக்கு? 'எங்கே போயிருப்பாள்?' என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு வெளியே வந்தான். அங்கே அவனுக்கு முன்னால் வந்து நின்று கொண்டிருந்த அவனுடைய அம்மா,"'மணி எட்டு அடிக்கப் போகிறது, உன் அப்பாவை இன்னும் காணோமேடா!" என்றாள்.

"அவர் எங்கே இப்போது வரப்போகிறார்? எனக்கு இருப்பது போல் அவருக்கும் ஓர் அப்பா இருந்தால் அவர் நேரத்தோடு வீட்டுக்கு வருவார்! அது தான் இல்லையே? அவர் எப்போது வந்தால் என்ன, அவரை யார் திட்டப் போகிறார்கள், அவரை யார் அடிக்கப் போகிறார்கள்?" என்றான் பையன்.

"உனக்கு அப்பா மட்டுமா இருக்கிறார்? அம்மாவும் இருக்கிறாள் என்பதை மறந்துவிடாதே!" என்று 'மாதிரி'க்கு அவன் காதைப் பிடித்துத் திருகினாள் அம்மா.

"அப்பாவுக்கு மட்டும் இல்லையா, அம்மா? அந்த அம்மாவுக்கு அப்பா எங்கே பயப்படுகிறார்? அதற்கும் பதிலாக அவளல்லவா அவருக்குப் பயப்படுகிறாள்!"

"கவலைப்படாதே, நீயும் பெரியவனானால் உன் அம்மா உனக்குப் பயப்படுவாள்!"

"அப்பா?"

"அவரும்தான்!"

பையன் பெருமூச்சு விட்டான். "ஏண்டா, பெருமூச்சு விடுகிறாய்?" என்று கேட்டாள் அம்மா.

"இருவரும் இப்போதே எனக்குப் பயப்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?" என்றான் பையன்.

அம்மா சிரித்தாள்; "ஏன் அம்மா, சிரிக்கிறாய்?" என்று கேட்டான் அவன்.

"ஒன்றுமில்லை; நீ போய்த் தூங்கு!" என்றாள் அவள்.

"ஊஹும்; நான் தூங்க மாட்டேன்"