பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/295

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுகதை மன்னன் பெற்ற செல்வம்

613

கொண்டு வந்த அவனுக்கு இன்று சிறுகதை மன்னன் செல்வராஜனே கதை சொல்வதென்றால்? - குதிகுதியென்று குதித்தான்.

அதற்குள் சாப்பிட்டுவிட்டு வந்த அவன் அப்பா, "மாடிக்குப் போவோமா?" என்றார் அவனிடம்.

"வேண்டாம், ஊஞ்சலிலேயே உட்கார்ந்து கொள்வோம்" என்றான் அவன், அப்பாவின் கால்கள் தனக்குப் படுக்கவா பயன்படப் போகின்றன என்ற எண்ணத்தில்.

"சரி!" என்று ஊஞ்சலிலேயே உட்கார்ந்த சிறுகதை மன்னர், தம்முடைய செல்வத்தைத் தூக்கித் தமக்குப் பக்கத்திலேயே உட்கார வைத்துக் கொண்டு கதையை ஆரம்பித்தார், கம்பீரமாக.

"அந்தி வானம் செக்கச் செவேரென்று இருந்தது - தீ, தீ! வானமெங்கும் செந்தீ.....!"

"வானத்திலாவது, தீயாவது! என்னப்பா இது? சுத்தப் பேத்தலாயிருக்கிறதே?" என்றான் பையன், ஏமாற்றத்துடன்.

'"தீ என்றால் தீ இல்லை ; அந்தி நேரத்தில் வானம் செந்நிறமாக இருக்கிறதல்லவா, அதைச் சொல்கிறேன்" என்றார் அப்பா, அசடு வழிய.

"ஓஹோ , அப்புறம்?"

"அந்த நேரத்தில் பறவையினங்கள் 'கா, கூ' என்று கத்தியதுகூட, 'தீ,தீ!' என்று கத்துவது போலிருந்தது...!"

"அட, பாவமே! தீயணைக்கும் படையினர்கூட அதைத் தீயென்று நினைத்து, உடனே மோட்டார், பம்பு செட்டுகளுடன் கிளம்பிவிட்டார்களா, என்ன?"

"இல்லைடா, இல்லை; பறவைகள் மட்டும்தான் அப்படி நினைத்தன..."

"நல்ல வேளை, அப்புறம்?"

"சற்றுத் தூரத்திலிருந்த சாமுண்டீஸ்வரி கோயில் மணி ‘ஓம், ஓம்' என்று ஒலித்தது, சந்தியா காலப் பூஜையை அறிவிக்க. அர்ச்சகர்கள் ‘அம்மன்' மேல் ஒரு கண்ணும், அம்மனுக்கு அர்ச்சனை செய்யவரும் 'அம்மாக்கள் கொடுக்கும் தட்சணையின் மேல் இன்னொரு கண்ணுமாகத் தங்கள் பூஜையை ஆரம்பித்தனர். அன்று வெள்ளிக் கிழமையாக இருந்ததால் கோயில் வாசலில் கூடியிருந்த பிச்சைக்காரர்களுக்குக்கூட நல்ல வரும்படி..."