பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/303

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஈசன் விட்ட வழி

நாளை பொழுது விடிந்தால் தீபாவளி. வழக்கத்துக்கு விரோதமாக வெறுங்கையுடன் வேலையிலிருந்து வீடு திரும்பிய வெங்கடாசலத்தைச் சூழ்ந்து கொண்டு, "அப்பா, எனக்குப் பட்டுப் பாவாடை!" என்றது ஒரு குழந்தை; "அப்பா, எனக்குப் பட்டுச் சட்டை!" என்றது இன்னொரு குழந்தை. "எனக்குப் பட்டுப் பாவாடையும் வேண்டாம், பட்டுச்சட்டையும் வேண்டாம்; நிறையப் பட்டாசுதான் வேண்டும்!" என்றது மற்றொன்று; பட்டாசு வாங்கிக் கொண்டு வரும்போது பட்சணம் வாங்கிக் கொண்டு வர மறந்துவிடாதே, அப்பா!" என்றது மற்றும் ஒன்று.

எல்லாவற்றுக்கும், 'ஆகட்டும், ஆகட்டும்' என்று தலையை ஆட்டிவிட்டுக் கடந்த ஆறு மாத காலமாக நோய் வாய்ப்பட்டிருக்கும் தன் அப்பா ஆதிமூலனாரின் அறைக்குள் நுழைந்தான் அவன். "இப்போதுதான் வருகிறாயா?" என்றார் அவர், ஈனஸ்வரத்தில், "ஆமாம், அப்பா! உடம்பு எப்படியிருக்கிறது?" என்று கேட்டான் அவன்.

"என் உடம்புக்கு என்ன? அறுபதாண்டு விழாவைக் கொண்டாடிய அது, நூற்றாண்டு விழாவைக்கூடக் கொண்டாடும் போலிருக்கிறது! நீ போ, போய்க் காபி சாப்பிடு!"

"காபிக்கு இப்போது என்னப்பா, அவசரம்? டாக்டர் வந்தாரா, என்ன சொன்னார்?"

"வந்தார்; 'கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாய்ப் போய்விடும்' என்று சொன்னார்!"

'கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாய்ப் போய்விடும்' என்று சொன்னார் - இரு பொருள் கொண்டது போல் தொனித்த இது, அவனை என்னவோ செய்வது போலிருந்தது; இதயத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தான் - ஏழு மாதத்துக் குழந்தையிலிருந்து எம்.ஏ பட்டம் பெறுகிற வரையில் அவனைப் பல கோணத்தில் எடுக்கப்பட்ட படங்கள் அங்கே மாட்டப்பட்டிருந்தன. அவற்றுக்கு மேலே அவனைப் பெற்றெடுத்த ஆறாவது மாதத்திலேயே கண்ணை மூடிவிட்ட அவன் அன்னையின் படம் மாட்டப்படிருந்தது - அன்றிலிருந்து, அதாவது தன் தாயார் கண்ணை மூடிவிட்ட அந்த நாளிலிருந்து, தாரம் இழந்த தன் தகப்பனார்-இழந்த தாரத்துக்குப் பதிலாக எந்தக் காரணத்தைக் கொண்டும் மறுதாரம் தேடிக் கொள்ளாத தன் தகப்பனார்-தன்னைக் காப்பாற்ற என்ன பாடு பட்டிருக்க வேண்டும்? எத்தனை பேருடைய தயவை நாடியிருக்க வேண்டும்? அதற்கெல்லாம் பிராயச்சித்தமாக இன்று வரை தான்