பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/304

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

622

விந்தன் கதைகள்

அவருக்கு ஏதாவது செய்ததுண்டா, செய்வதற்குரிய சந்தர்ப்பத்தையாவது அவர் தனக்கு அளித்ததுண்டா? கடந்த ஆறு மாத காலமாகத் தன்னால் இயலாத நிலையில், 'என்னைக் கொஞ்சம் தூக்கி உட்கார வை, கழிவிடத்துக்கு அழைத்துக் கொண்டு போ, படுக்க வைத்து விடு' என்பதைத் தவிர!

இந்தச் சந்தர்ப்பத்தைக்கூட அவர் தனக்கு அவ்வளவு எளிதிலா அளித்துவிட்டார்? இல்லை; மருத்துவ மனைக்குப் போய் விடுவதாகவல்லவா சொன்னார்?

அப்படிப்பட்ட ஆத்மா 'இன்றோ, நாளையோ?' என்று இருக்கும்போது, இந்த வீட்டில் எப்படித் தீபாவளி கொண்டாடுவது? எனக்கு 'அது வேண்டும், இது வேண்டும்' என்று நச்சரிக்கும் குழந்தைகளை எப்படிச் சமாதானம் செய்வது?

இவ்வாறு அவன் எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது ஐந்தாவது குழந்தையின் பிரசவத்தைப் பார்த்துவிட்டுப் போவதற்காகத் தன் மகள் தங்கம் முழுகி மூன்று மாதங்கள் ஆவதற்கு முன்னமேயே வந்து விட்டிருந்த அவன் மாமியார் அபயாம்பாள் வந்து, "நான் சொல்கிறேன் என்று நீங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது; நல்ல நாளும் அதுவுமாக நீங்கள் அந்த மனுஷரை இங்கே வைத்துக் கொண்டிருப்பது அவ்வளவு நல்லதில்லை. இதுவோ குழந்தை குட்டிகள் உள்ள வீடு; அக்கம்பக்கத்துக்கு அஞ்சியாவது தீபாவளியை நாம் எப்படியாவது கொண்டாடியே தீர வேண்டும். பேசாமல் அவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுங்கள்; ஈசன் விட்ட வழியாகட்டும்!" என்றாள், அந்த வயதிலும் மருமகனைப் பார்த்து வெட்கப்படுபவளைப் போல் முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டு.

அதற்குக் கையில் காபியுடன் அங்கே வந்த தங்கம், "அதை ஏம்மா, நீ சொல்கிறாய்? அவருக்கு நல்லது சொல்வதும் தெரியாது; கெட்டது சொல்வதும் தெரியாது!" என்றாள் தனக்கே இயல்பான 'தனித் தன்மை'யுடன்!

"சொல்ல வேண்டாம் என்றுதான் இருந்தேன், மனசு கேட்கவில்லை!" என்றாள் அவள் பெருமூச்சுடன்.

"வந்ததும் வராததுமாக இருக்கும்போதே அவர் பிள்ளையிடம் சொல்கிறாரே, 'கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாய்ப் போய்விடும்' என்று டாக்டர் சொன்னதாக -அவர் அப்படியா சொன்னார்? 'இன்னும் இரண்டு நாட்களுக்கு மேல் தாங்காது; இஷ்டப்பட்டதை யெல்லாம் சாப்பிடுங்கள்!' என்றுதானே சொன்னார்?- ஏண்டா, பாலு! சொல்லேண்டா, நீ கூடத்தானே கேட்டுக் கொண்டிருந்தாய்?" என்று தன் மூத்த மகனைச் சாட்சிக்கு அழைத்தாள் தங்கம்.