பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/305

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈசன் விட்ட வழி

623

"ஏன், உன்னுடைய வார்த்தையில் உனக்கே நம்பிக்கை யில்லையா?" என்றான் வெங்கடாசலம், அவளிடமிருந்த காபியை வாங்கி மேஜையின் மேல் வைத்துவிட்டு.

"என்னுடைய வார்த்தையில் எனக்கென்னவோ நம்பிக்கை இருக்கத்தான் இருக்கிறது; உங்களுக்கு இருக்க வேண்டுமே என்பதற்காகத்தான் அவனை நான் சாட்சிக்குக்கூப்பிட்டேன்!" என்று அவனை எரித்துவிடுபவள்போல் பார்த்துக்கொண்டே திரும்பினாள் அவள்.

"நீ சொன்னது சரியாய்த்தான் போச்சு! அவருக்கு நல்லதும் தெரியவில்லை, கெட்டதும் தெரியவில்லையே?" என்று சொல்லிக் கொண்டே அவளைத் தொடர்ந்தாள் அபயாம்பாள்.

வையைனைத்தையும் படுக்கையில் இருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்த ஆதிமூலனார் சிரித்தார் அவருடைய சிரிப்பிலே ஜீவன் இல்லையென்றாலும், சிந்தனையில் ஜீவன் இருந்தது.

பிறர் வெறுக்கும் வரை இருப்பதைவிட, விரும்பும் போதே இறந்து விடுவது எவ்வளவோ நல்லதுதான்! ஆனால், தான் அதற்குக் கொடுத்து வைக்கவில்லையே?

சம்பந்தியம்மாளுக்கு இன்று தான் இந்த நிலையில் இருப்பது 'சங்கட'மாக இருக்கிறது என்றால், தன் மகனுக்கோ அது 'தர்மசங்கட'மாக இருக்கிறது! இந்த ஒரு வித்தியாசத்தைத் தவிரவேறு என்ன வித்தியாசம் இருக்கிறது, இப்போதுள்ள சங்கடத்தில்?

மருமகளைப் பற்றியோ சொல்லவே வேண்டாம்; அவளுக்கு நான் எப்போதுமே வேண்டாதவன்! அவளுக்கு மட்டுமென்ன, இந்த உலகத்துக்கே இப்போது நான் வேண்டாதவன்தானே?

பேரப் பிள்ளைகளின் சந்தோஷத்தை அவர்கள் விரும்புவது போலவே நானும் விரும்பத்தான் விரும்புகிறேன். ஆனால்........

இவர்கள் சொல்வது போல் தன் மகன் தன்னை மருத்துவ மனையில் சேர்த்துவிட்டால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது?

அங்கே நான் தீபாவளியும் அதுவுமாக வாயைப் பிளந்துவிட்டால், இங்கே இவர்களால் தீபாவளி கொண்டாடி விட முடியுமா? அப்போதும் அக்கம்பத்துக்கு அஞ்சியாவது இவர்கள் அதைக் கைவிடத்தானே வேண்டியிருக்கும்?

பார்க்கப் போனால் இந்த வருடத்தோடு முடிந்துவிடப் போவதில்லை இந்தத் துக்கம்; அடுத்த வருடமும் தொடரும் - இது சமூக நியதி; இந்த நியதி ஏன் தெரியவில்லை சம்பந்தியம்மாளுக்கு?