பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/311

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறுபடியும்......

629

......எப்படியடி இருக்கிறாய்? எப்பொழுதோ இறந்து போன அகமுடையானுக்காக மாதம் தவறாமல் அமாவாசை விரதம் இருந்து கொண்டு, வருடம் தவறாமல் திதி கொடுத்துக் கொண்டு இருக்கிறாயா? இரு இரு, இருக்கிற வழிக்கு ஒன்றும் கிடைக்காவிட்டாலும் போகிற வழிக்குப் புண்ணியமாவது கிடைக்கும். இருடியம்மா, இரு! இந்தக் கடிதத்தை இப்போது நான் உனக்கு எழுதுவதாகவே இல்லை; திடீரென்று வந்து உன்னைத் திகைக்க வைக்கவேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனால் அப்போதிருந்த 'ஏழைச் சிறுமி ஹேமா வா நீ, எப்போது வந்தாலும் வீட்டில் இருக்க? நீதான் இப்போது 'சீமாட்டி ஹேமா'வாகிவிட்டாயே! நான் வரும்போது எங்கே போய் விடுவாயோ என்னமோ என்றுதான் இதை எழுதுகிறேன்: ஆமாம், நாளை மறுநாள் அடியாள் சென்னை விஜயம்; அங்கிருந்து டெல்லி பயணம்; இடையே உள்ள நேரத்தை உன்னுடன் கழிக்க விருப்பம். என்ன, இருக்கிறாயா வீட்டில்?

மற்றவை நேரில்.......

உன் அன்புத் தோழி,
கலா."

கடிதத்தைப் படித்து முடித்ததும், 'ஏக ஜாலியாக எழுதியிருக்கிறாளே, கடிதத்தை! அப்படி என்ன சந்தோஷம் வந்துவிட்டிருக்கும் இவளுக்கு? பார்க்கப்போனால் இவளும் என்னைப் போன்ற ஒரு விதவைதானே! என்னை வாட்டும் தனிமை இவளை மட்டும் வாட்டாமலா விட்டிருக்கும்? என்று நினைத்த ஹேமா, ‘நடுவில் நாளை ஒரு நாள்தானே? மறு நாள் வந்தால் எல்லாம் தெரிந்து விடுகிறது!' என்று எண்ணிக்கொண்டே கையிலிருந்த கடிதத்தை மடித்து ஒரு புத்தகத்துக்குள் வைத்துவிட்டு எழுந்தாள்.

ஏழெட்டு வருட கால இடைவெளிக்குப் பிறகு அன்று கலாவைச் சந்தித்த ஹேமா, அவள் எழுதியிருந்தபடியே திகைத்துத்தான் போனாள். காரணம், அவள் எதிர்பார்த்தபடி கலா அமங்கலியாக வரவில்லை; சுமங்கலியாக வந்திருத்தாள்!

"மறுபடியும் நீ......"

"ஆமாம், மறுமணம் செய்து கொண்டேன். இவர் என் கணவர்; இவன் எங்கள் செல்வம்!" என்று தனக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த தன் கணவரையும், அவருக்குப் பக்கத்தில்