பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

விந்தன் கதைகள்

எனக்கு முன்னால் திடீரென்று ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டான் அவன்.

"ஏன், என்ன விஷயம்?"என்று பரபரப்புடன் விசாரித்தேன். அந்தச் சமயத்தில், "ஆமாம் போங்கள் இன்னும் எத்தனை வருஷங்கள்தான் நம் வீட்டுக் குழந்தைகள் 'ஊர்க்குழந்தை' களாயிருப்பதாம்?" என்று கொஞ்சும் பெண் குரலொன்று என் காதில் விழுந்தது.

அதைத் தொடர்ந்து, "பெரிய மனுஷன், பண்பாடு மிக்கவன் என்று பெயர் எடுக்க வேண்டுமென்றால் சும்மாவா?"என்ற ஆண் குரலொன்றும் கேட்டது.

நான் திடுக்கிட்டேன்-கலகலவென்ற சிரிப்பொலி எழுந்தது.

ஒன்றும் புரியாமல் குப்புலிங்கத்தைப் பார்த்தேன். திறந்த ஜன்னல் ஒன்றைச் சுட்டிக் காட்டிவிட்டு, அவன் எடுத்தான் ஓட்டம்.

நான் எட்டிப் பார்த்தேன்-என்ன ஆச்சரியம்!உள்ளே ஏழெட்டுப் பெண்களுக்கு நடுவே 'எங்கள் ஊர்க்காந்தி எழுந்தருளியிருந்தார்; மேலே ஒரு துண்டும் கீழே ஒரு துண்டும் வழக்கமாக இருக்கும் பாருங்கள். அவற்றைக்கூட மறந்து அவர் எளிமையின் உச்சிக்கே போய் வாய்மையையும் தூய்மையையும், பண்பையும் பாரம்பரியத்தையும் அங்கே வளர்த்துக் கொண்டிருந்தார்!