பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/320

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

638

விந்தன் கதைகள்

என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தபோது, பற்றுத் தேய்க்கும் பாப்பாத்தி வந்து அவருக்கு எதிரே நின்று தலையைச் சொறிந்தாள்.

"என்ன?" என்றார் ஆத்மநாதன்.

"இந்த வருசம் எனக்குத் தீபாவளிப்புடவை வேண்டாமுங்க!" என்றாள் அவள்.

"ஏன்?" என்றார் அவர்.

"இன்னொரு வீட்டிலும் நான் பத்துத் தேய்க்கிறேன் இல்லைங்களா? அந்த வீட்டிலே எனக்குத் தீபாவளிப் புடவை வாங்கிட்டு வந்திருக்காங்க!"

"அதற்காக?"

"நீங்க புடவைக்குப் பதிலாப் பணமாக் கொடுத்திடுங்க!"

"எதற்கு?"

"என் பொண்ணுக்கு ஏழெட்டு வயசு ஆயிடிச்சிங்க. இதுவரையிலே அவ வெட்கம்னா என்னன்னே தெரியாம திரிஞ்சிக்கிட்டிருந்தா..."

"இப்போ?"

"பாவாடை, ஜாக்கெட் இல்லாம அவள் வெளியே போகமாட்டாளாம்!"

"நல்ல வேடிக்கைதான்! வெட்க மென்றால் என்னவென்று தெரியும் வரை உங்களுடைய குழந்தைக்கு நீங்கள் துணிமணிவாங்கிக் கொடுக்க மாட்டீங்களா, என்ன?"

"மாட்டார்கள், சார்! 'மானமும் மரியாதையும் இருக்க வேண்டியவர்களுக்கு இருக்கட்டும், நமக்கு வேண்டாம்' என்று நினைப்பவர்கள் சார், அவர்கள்!"

இந்த 'இடைச் செருகல்' யாருடையது என்று தெரியாமல் பாப்பாத்தி மட்டுமல்ல, ஆத்மநாதனும் திடுக்கிட்டுத் திரும்பினார். கையிலிருந்த அன்றைய தினசரிப் பத்திரிகைகள் இரண்டை அவருக்கு முன்னாலிருந்த 'டீபா'யின் மேல் வைத்துவிட்டு நின்றான் அந்தத் தபாற்காரப் பையன்.

"நீதானா?" என்றார் அவர்.

"ஆமாம் சார், நானேதான், சார்!" என்றான் அவன்.

"இந்த வேலை எத்தனை நாட்களாக?"

"எந்த வேலை?"

"வீட்டுக்கு வீடு பத்திரிகை போடும் வேலைதான்!"

"இரண்டு மாத முயற்சிக்குப் பிறகு இன்றுதான் சார், எனக்கு இந்த வேலை கிடைத்திருக்கிறது!"