பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எதிர்க்கட்சி

மாலை மணி ஐந்து இருக்கும். வெள்ளிநாயகம், தங்க நாயகத்தின் குடிசை வாசலில் வந்து நின்று, "என்னா அண்ணே, கூட்டத்திற்கு வாறியா?"என்று கேட்டான்.

"வாரேன், தம்பி!"என்று சொல்லிக் கொண்டே, வெளியே வந்தான் தங்கநாயகம்.

இருவரும் கடற்கரையை நோக்கி நடந்தனர். வழியில் "ஏன் அண்ணே! நம்ம சங்கத்தை யாரோ தொறந்து வைக்கப் போறாங்கன்னு சொன்னியே, அது யார் அண்ணே?"என்று கேட்டான் வெள்ளிநாயகம்.

"அவர்தான் நம்ம தலைவர் சண்டமாருதம்!"என்றான் தங்கநாயகம்.

"அவருக்கு நம்மைப் பத்தி என்னா தெரியும்? பாவம். நடந்து கூட அவருக்கு பழக்கமிருக்காது போல இருக்குதே!"


"நல்லாச் சொன்னே! அவர் எம்மாம் பணம் வச்சி இருக்காரு!"

"ஓஹோ! அதுக்காவத்தான் அவரைக் கூப்பிட்டிருக்காங்களா?-சரிசரி; எனக்கு ஒரு சந்தேகம், அண்ணே!”

"என்ன சந்தேகம்?"

"அந்தச் சங்கத்தை 'நம்மசங்கம்'ன்னு நான் எப்படிச் சொல்லிக்கிடறது. அண்ணே?"

"ஏன் சொல்லிக்கிடக்கூடாது?"

"என்ன இருந்தாலும் நீ வேறே, நான் வேறே இல்லையா?”

“என்ன வேறே? நீயும் கூலி, நானும் கூலிதானே?"

"அது சரி, ரெண்டு பேரும் கூலியாயிருந்தாலும் நமக்குள்ள வித்தியாசம் இருக்குதில்லே?"

"அது என்ன வித்தியாசம், தம்பி?"

"நீ ரெயில்வே கூலி;உனக்குன்னு ஒரு சட்டை, கிட்டைஎல்லாம் கொடுத்திருக்காங்க. எனக்கு அப்படியில்லை, பாரு! நான் கண்ட சட்டையை போட்டுகிட்டு நினைச்ச இடத்திலே நின்னுகிட்டு இருக்கிறவன் தானே?"