பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



352

விந்தன் கதைகள்

"என் சட்டையைச் சொல்லு, 'கூலி'ன்னு, நெத்தியிலே எழுதி ஒட்டி வச்சிருக்காப் போல! பார்க்கப் போனா எல்லாம் பொதி சுமக்கிற ரெண்டு கால் கழுதைங்கதானே? அதிலே வித்தியாசம் ஒரு கேடா?"

"ஒரேயடியா அப்பிடிச் சொல்லிப்பிட முடியுமா?"

"அட, நீ ஒண்ணு! அதுக்காவத்தானெ நம்ம சங்கத்துக்குக் 'கூலிங்க சங்கம்'னு பொதுவாக பேரு வச்சி இருக்காங்க!"

"என்னமோ போ, அண்ணே! எனக்கு ஒண்ணும் புரியலே!" அதற்குள் கடற்கரை நெருங்கி விடவே, அவர்களுடைய பேச்சு நின்றது. மேடைக்கு அருகே இருவரும் நல்ல இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டனர்.

"ஸ்ரீமான் சண்ட மாருதத்துக்கு, ஜே!" என்ற கோஷம் காதைப் பிளந்ததும், கூலிகள் சங்கத்தின் திறப்பு விழா ஆரம்பமாயிற்று. இளைஞர் ஒருவர் மேடையின் மேல் ஏறிக் கம்பீரமாக நின்று,

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு-நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே!
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?"

என்னும் பாரதியாரின் பாடலை உரத்த குரலில் பாட ஆரம்பித்தார்; கூட்டத்தில் அமைதி நிலவியது.

பாட்டு முடிந்ததும் தங்கநாயகம் ஒரு நீண்ட கரகோஷம் செய்துவிட்டு, "கேட்டியா தம்பி, நம்ம வாழ்வு தாழ்வு எல்லாம் எங்கே இருக்குதுன்னு இப்பவாவது தெரிஞ்சு கிட்டியா?" என்று கேட்டான், வெள்ளி நாயகத்தை.

"எங்கே இருக்குதாம்?" என்று வெறுப்புடன் அவனைத் திருப்பிக் கேட்டான் வெள்ளி நாயகம்.

"இது கூட உனக்குத் தெரியலையா? - அட பாவி, எல்லோரும் ஒற்றுமையாய் இருக்கிறதுலேதான் இருக்கு தாம்!" என்றான் தங்க நாயகம் பெருமையுடன்.

"ஆமாமாம்; ஆனா...."

"ஆனா என்னா? உனக்கு எப்போப் பார்த்தாலும் சந்தேகந்தான்!" என்று தங்க நாயகம் எரிந்து விழுந்தான்.