பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எதிர்க்கட்சி

353

அதே சமயத்தில், 'ஸ்' என்ற சத்தம் சபையின் மூலை முடுக்கிலெல்லாம் எழுந்தது. அதைத் தொடர்ந்து ஸ்ரீமான் சண்ட மாருதம் எழுந்து ஒலி பெருக்கியின் முன்னால் நின்றார்.

"தயவு செய்து அமைதியாயிருங்கள்!" என்று 'தற்காப்பு'க்காகச் சபையோரைக் கேட்டுக் கொண்டு தம் பிரசங்கத்தை ஆரம்பித்தார். அவருடைய பேச்சிலும் அன்று ஒற்றுமைதான் முக்கிய ஸ்தானம் வகித்தது.

ஏனெனில் கூலிகளுக்கு தங்கள் சங்கத்தால் நன்மை விளைந்தாலும் சரி, நன்மை விளையாவிட்டாலும் சரி - அந்தப் பழியை ஒற்றுமையின் மேல் போட்டுவிட்டு தலைவர் தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா?-எனவே "ஒற்றுமை இன்றேல் ஒன்றுமே இல்லை; "ஒற்றுமை வழி ஒன்றே வழி!" என்று அழுத்தந்திருத்தமாக முழங்கிவிட்டு, திறப்பதற்கு ஒன்றும் இல்லாத கூலிகள் சங்கத்தை அவர் 'சும்மானாச்சும்' திறந்து வைத்தார். அவருக்கு அடுத்தாற்போல் பேசிய இன்னும் சிலரும் ஒற்றுமையைப் பற்றியே ஓயாமல் பேசிப் பேசி ஓய்ந்தார்கள்; ஒரு குரோஸ் சோடா புட்டிகள் காலியான பிறகு கூட்டம் இனிது முடிவதற்குப் பதிலாக ஒரே கரிப்புடன் முடிந்த காரணம் வேறொன்றுமில்லை; சோடாதான்!

அதற்குமேல் தங்கநாயகத்துக்கும் வெள்ளிநாயகத்துக்கும் அங்கே என்ன வேலை!-எழுந்து தங்கள் தங்கள் வீடுகளை நோக்கி நடந்தனர். பிரசங்கிகள் கூலிகளை ஒருகணம் மறந்து, தாங்கள் அன்றைய தினம் பேசிய பேச்சுகளுக்காக ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டனர். பிறகு, "கேவலம், ஒரு சட்ட சபை அங்கத்தினர் பதவிக்குக் கூட இந்தக் காலத்தில் எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது!"என்ற தங்களுடைய ஆற்றாமையை ஆளுக்குக் கொஞ்சம் பகிர்ந்து கொண்டு கலைந்தனர்.

மறுநாள் மாலை வெள்ளிநாயகம் வழக்கம்போல் சென்னை 'பாரிஸ் கார்னரில் அப்படியும் இப்படியுமாக நடை போட்டுக் கொண்டிருந்தான். அதுவரை சம்பாதித்திருந்த எட்டனாக்காசு அவன் மடியில் பத்திரமாக இருந்தது. அதை எடுத்து அவன் அடிக்கடி எண்ணிப் பார்த்துக் கொண்டான். எத்தனை தரம் எண்ணிப் பார்த்துத்தான் என்ன? அந்த பாழும் எட்டனா எட்டனாவாகவே இருந்தது! அதை வைத்துக் கொண்டு அவனும் அவனுடைய மனைவி மக்களும் அன்றையப் பொழுதை எப்படிக் கழிப்பது? இன்னும் ஒரு எட்டனாவாவது கிடைத்தால் பரவாயில்லை!-அதற்காக யாராவது கையில் ஒரு சிறுபையுடன் சென்றாலும், "ஏன் சாமி!கூலி வேணுமா, சாமி!" என்று அவன் கேட்டுக் கொண்டே இருந்தான். கிறுக்குப்

வி.க. -23