பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

விந்தன் கதைகள்

பேர்வழி ஒருவர் "என்னிடம் கூலிக்கு ஒன்றுமில்லை; என்னை வேண்டுமானால் தூக்கிக் கொண்டு போய் என் வீட்டில் விடுகிறாயா?" என்று கேட்டபோது கூட அவன் சளைக்க வில்லை; "ஆகட்டும், சாமி! தோள் மேலே வேணுமானால் உங்களை துக்கிட்டுவாறேன்; எப்படியாச்சும் காசு கெடச்சா சரி!" என்று சொல்லிக் கொண்டே அவரை நெருங்கினான். "போடா, போ!"என்று சொல்லிவிட்டு அவர் விரைந்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு பெரிய மனிதர் பெட்டி, படுக்கையுடன் ரிக்ஷாவில் வந்து பஸ் நிலையத்தில் இறங்கினார். ரிக்ஷாவாலா அவரிடம் கூலி பெற்றுக் கொண்டு அப்பால் சென்றதும் வெள்ளி நாயகம் ஓடோடியும் வந்து, "ஏன் சாமி! எங்கே போவணும்?"என்று கேட்டான்.

"பெங்களுருக்கு!-ஏன், நீயும் வருகிறாயா?" என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

"நீங்க அம்மாந்துரம் நடந்து போறதாயிருந்தா, நானும் அம்மாந்துரம் நடந்து வாறேன், சாமி!"என்றான் வெள்ளி நாயகமும் சிரித்துக் கொண்டே.

அதற்குள் ஒண்ணாம் நம்பர் பஸ் வந்து நின்றது. பெரிய மனிதர் வெள்ளி நாயகத்தை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, பெட்டியையும், படுக்கைகையையும் தூக்கிக் கொண்டு போய் பஸ்ஸில் வைத்தார்.

கண்டக்டர், "பெட்டி, படுக்கைகளையெல்லாம் பஸ்ஸில் ஏற்றக் கூடாதுங்க!"என்று அவரைத் தடுத்தான்.

"ஏன்?" என்று கேட்டார் பெரிய மனிதர்.

"எனக்குத் தெரியாதுங்க; உங்க சர்க்காரைக் கேளுங்க!" என்று சொல்லிவிட்டு, அவன் டிரைவரை நோக்கி, "போப்பா, ரைட்!" என்று அலட்சியமாக 'விஸில்' அடித்தான்; பஸ் கிளம்பிவிட்டது.

வெள்ளிநாயகம் பெரிய மனிதரைப் பார்த்தான். பெரிய மனிதர் வெள்ளி நாயகத்தைப் பார்த்தார்.

"இப்போவெல்லாம் பட்டணத்துல எந்தப் பஸ்ஸிலும் பெட்டி, படுக்கைகளை ஏத்தறதில்லைங்க!” என்றான் வெள்ளி நாயகம்.

"நாசமாய்ப் போச்சு நான் இப்போது ஸென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போக வேண்டுமே, என்ன செய்வது?"என்று முணுமுணுத்தார் பெரிய மனிதர்.

"இதோ, பக்கத்திலே பீச்சுடேசன் இருக்குதுங்க;அங்கேயிருந்து பார்க்குடேசனுக்கு எலெக்டிரிக் வண்டி போகுதுங்க; அதிலே பெட்டி,