பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வேதாந்தம்

363

அவருடைய பெருமையைப் பற்றி கொஞ்சம் இடையிலே எடுத்துவிட்டார் கருப்பையா.

"ஆனால் கோபம் வந்தாலோ அவரை யாரும் கட்டுப் படுத்த முடியாது!" என்று நல்லமுத்துவுக்கு கொஞ்சம் கூடத் தெரியாதவர் ஒருவர் சந்தர்ப்பத்தை உத்தேசித்து சொல்லி வைத்தார்.

"நல்லவர்களுக்கே எப்போதும் கோபம் கொஞ்சம் அதிகமாகத்தான் வரும்" என்று கருப்பையா தம்முடைய ஞானத்தை அந்த இடத்தில் சற்று காட்டிக் கொண்டார்.

"ஆமாம், ஆமாம்” என்று அவர் சொன்னதை சில காரியவாதிகள் ஆமோதித்தனர்.

"ஒரு நாள் பாருங்கள், அவருடைய கடைக்கு ரேஷன் அரிசி வாங்க ஒருத்தி வந்தாள். அவள் மிகவும் ஏழை, அரிசிக்கு வேண்டிய காசுக்கே அவளுக்குப் பஞ்சம். அப்படியிருக்கும் போது அவள் கோதுமைக்கு எங்கே போவாள்? வேண்டாம் என்று சொன்னாள்.

"அப்படி யார் சொல்வார்கள்?" என்றுதானே ரேஷன் கடைக்காரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்த விஷயம் தெரியாமல் ஒருவன், 'நீ வேண்டாம் என்று சொல்லும் கோதுமையை எனக்கு வாங்கிக் கொடுத்து விடேன்' என்றான். அவ்வளவுதான்; நல்லமுத்துவுக்கு வந்து விட்டது கோபம்; அவனைப் பிய்த்துப் பிரிகட்டி விட்டார்-பாவம். அவன் அசடுவழிய அரிசியை வாங்கிக் கொண்டு போனான்-இப்படியெல்லாம் ஏழை எளியவர்களை மிரட்டி. அவர்களுடைய வாயில் வயிற்றில் அடித்து, பாழும் பணத்தை சேர்த்தாரே என்னத்தை வாரிக்கட்டிக் கொண்டு போனார்?" என்று கடைசியாகக் கருப்பையா வேதாந்தத்தில் இறங்கினார்.

"என்னத்தைக் கட்டிக்கொண்டு போவது? கொளுத்தும்போது அண்ணாக்கயிறக்கூட அறுத்துக் கொண்டல்லவா கொளுத்து கிறார்கள்!" என்றார் ஒரு பெரியவர். இதைக் கேட்டுக் கொண்டே அப்போது கோபாலசாமி கையில் கொத்துச்சாவியுடன் அங்கே வந்து சேர்ந்தான். நேரமாகி விட்டதால் கடையைப் பூட்டிக்கொண்டு சாவியை முதலாளியிடம் கொடுத்துவிட்டுப் போவதற்காக அவன் வந்தான்.

கருப்பையா அவனைக் கவனியாதவர்போல், "இன்னொரு வேடிக்கை உங்களுக்குத் தெரியுமோ? வியாபாரத்தில் இந்த மாதிரி