பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருடனுக்கு விடுதலை!

375

அந்த வழக்கத்தின் காரணமாக அன்று எஜமான் கையிலிருந்த வைர மோதிரத்திற்கு பிடித்தது தலைவலி. அதை எப்படியாவது பிடுங்கித் தன் 'ப்ரெண்'டுக்குக் கொடுத்து விடவேண்டுமென்று எஜமானியம்மாள் தீர்மனித்தாள்-அவ்வளவுதான்; அன்று மாலை 'காதல்’ திடீரென்று கரை புரண்டது; என்று மில்லாத திருநாளாகத் தன் கணவனை அழைத்துக் கொண்டு அவள் கடற்கரையை நோக்கிச் சென்றாள். வெகு நேரம் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்த பிறகு, அவரை ஆசையுடன் அணைத்து முத்தமிடப் போனாள். நாலுபேருக்கு முன்னால் அவ்வாறு நடந்து கொள்ளத் துணிந்தது அவளுக்கு வெட்கமாக இல்லாவிட்டாலும், அவருக்கு வெட்கமாக இருந்தது. "இதெல்லாம் இங்கே எதற்கு? வீட்டில் வைத்துக் கொள்வோமே!" என்றார்-உடனே வந்துவிட்டது கோபம் அவளுக்கு. அந்தக் கோபம் தான் இன்னும் தீரவில்லை-எப்படித் தீரும்-அதனால் வைர மோதிரமல்லவா கிடைக்காமற் போய்விட்டது!

அந்தத் தீராத கோபத்தைத் தீர்த்து வைப்பதற்காக, "பொங்கல் வரப்போகிறதே, உனக்கு ஒன்றும் வேண்டாமா?" என்று கேட்டார் அந்த அப்பாவி.

"நான் என்ன பச்சைக் குழந்தையா?-மிஸ்டர் ஹரன், என்னை இன்னொரு முறை இப்படியெல்லாம் கேட்காதீர்கள்!” என்று அவள் உறுமினாள்.

"இல்லை; இல்லவே இல்லை!" என்று கன்னத்தில் போட்டுக் கொள்ளாத குறையாக அவர் கலங்கினார்.

"ஆமாம், எனக்கு வேண்டியதை நானே வாங்கிக் கொண்டு விட்டேன்!” என்றாள் அவள்.

“எப்போது என்று தெரிந்து கொள்ளலாமோ?" என்றார் அவர்.

"ஓ, பேஷாய்! இன்று 'கிவ் அண்ட்டேக்'குக்குப் 'போன்' பண்ணி ஒரு நூறு புடவைகள் கொண்டுவரச் சொன்னேன். அவற்றில் பத்துப் புடவைகள் எனக்கு பிடித்திருந்தன. எடுத்துக் கொண்டேன். நீங்கள் "இம்மீடியட்டா அவனுக்கு ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறுக்கு ஒரு 'செக்' அனுப்பிவையுங்கள்!" என்று சொல்லிவிட்டு அவள் சிங்கார அறைக்குச் சென்றாள். அவர் மூர்சையானார்!

"கல்யாணம் செய்து கொள்வது முட்டாள்தானம்" என்பது விவேகானந்தர் வாக்கு. அந்த முட்டாள் தனத்தை மும்முறை