பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மறுமணம்

வள் போய் விட்டாள்-எவள் போய்விட்டாள்? தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உயிருடன் மறந்து, "இனி நீயே கதி!" என்று மணப்பந்தலில் பந்து மித்திரர்களுக்கு முன்னால் என் கரத்தை எவள், தன் மலர்க்கரத்தால் பற்றினாளோ, அவள்; வீடு, வாசல் ஒன்று ஏற்படுத்தி, ஏகாங்கியாக எங்கும் போகவிடாமல் எவள் என்னைத் தடுத்தாட் கொண்டாளோ, அவள்; எனக்கு நோய் நொடி வந்த போதெல்லாம் தனக்கே வந்து விட்டதாக நினைத்து அல்லும் பகலும் என் அருகிலேயே இருந்து எவள் எனக்குச் சேவைசெய்து வந்தாளோ, அவள்; 'அன்பு காட்டுவதில் தாயும், தாரமும் ஒன்றுதான் என்று எவள் என்னை நினைக்க வைத்தாளோ, அவள்; என் வாழ்க்கையில் அவ்வப்பொழுது ஏற்பட்ட சுகதுக்கம் இரண்டிலும், இத்தனைநாளும் எவள் பங்கெடுத்துக் கொண்டிருந்தாளோ, அவள்; வாழ்க்கை இந்திரஜாலம் போன்றது என்று தெரிந்திருந்தும் என்னுடன் எதிர்காலத்தைப் பற்றி எவள் என்னவெல்லாமோ திட்டம் போட்டுக் கொண்டிருந்தாளோ, அவள்!

அவள் பெற்ற செல்வம் ரகு இதோ இருக்கிறான்; அவள் பெற்ற கண்மணி ராதை, இதோ இருக்கிறாள்.

நானும் இருக்கிறேன், என் அம்மாவும் இருக்கிறாள்-அவள்?-போயே போய்விட்டாள்!

அவள் போய் இன்றுடன் ஆறு மாதங்களாகி விட்டன. நான் ஏன் இருக்கிறேன்?-அவள் போனால் போகிறாள்! என்று இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளவா? அம்மா ஏன் இருக்கிறாள்?-என்தலையில் இன்னொருத்தியைக் கட்டிவைக்கவா? ரகுவும், ராதையும் ஏன் இருக்கிறார்கள்? - 'நீங்கள் இரண்டாம் தாரம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது அவசியந்தான்!' என்று பிறர் என்னை வற்புறுத்தவா?-எப்படி முடியும்?

தாம்பத்திய வாழ்க்கையில் மனிதவர்க்கத்தைவிட மணிப் புறாக்கள் எவ்வளவோ மேலானவையாகத் தோன்றுகின்றன. அவை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏக பத்தினி விரதத்தைக் கை விடுவதில்லையாம். ஆண்புறா, பெண்புறாவை விட்டுப் பிரிந்தால் ஊணுறக்கமின்றி உயிரைவிட்டுவிடுமாம்; பெண்புறா ஆண்புறாவை விட்டுப் பிரிந்தால் உயிர்போகும் வரை உண்ணாவிரதமிருக்குமாம் - நாமும் அவற்றைப் பின் பற்றுவது சாத்தியமா?-அது எப்படிச்