பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



396

விந்தன் கதைகள்

யாரை, யார் என்ன சொன்னார்கள்? எனக்கு ஒன்றும் புரிய வில்லை. ஆனால் சரசுவுக்கு மட்டும் ஏதோ புரிந்திருக்கிறதே?-ஆச்சரியந்தான்! இப்படி எத்தனை எத்தனை ஆச்சரியமான நிகழ்ச்சிகள், அக்கிரமமான வம்புகள் நமது தாம்பத்திய வாழ்க்கையில்?

லலிதாவின் கண்கள் கலங்கின; என் மனம் தாங்கவில்லை. மாடிக்கு அழைத்துக்கொண்டு போய், “என்ன செய்யலாம், அம்மா? எல்லாம் கல்யாணம் செய்து கொண்டபலன்!" என்றேன்.

"அதனாலென்ன? மன்னிக்கு என்னைப் பிடிக்காத போது நான் ஏன் இங்கே இருக்கவேண்டும்? எதற்காக உங்கள் அமைதியைக் குலைக்கவேண்டும்? நாளைக்கே ஊருக்குத் திரும்பிப் போய் விடுகிறேன், அண்ணா!"

"ம், உன்னை, 'இரு' என்று சொல்லவும் எனக்குத் தைரியமில்லை; 'போ' என்று சொல்லவும் எனக்குத் தைரியமில்லை-என்ன செய்வேன்? உன் விருப்பம் அப்படியானால் இன்றைக்கே நான் உனக்கென்று ஒரு புடவையாவது வாங்கி வந்து வைத்து விடுகிறேன். அதைப் பெற்றுக் கொண்டு நீ சந்தோஷமாகப் போய்வா, சமயம் வாய்க்கும் போது நானே அங்கு வந்து உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்-எல்லாம் தெரிந்தவள் நீ; என்னுடைய நிலைமையைக் கண்டு கோபித்துக் கொள்வதற்குப் பதிலாக இரக்கமே கொள்வாயென்று நம்புகிறேன்."

"உங்கள் மேல் எனக்கு கோபம் ஒன்றுமில்லை, அண்ணா" என்று மேலே ஏதோ சொல்ல ஆரம்பித்தாள் அவள்.

அதற்குள் அங்கு வந்த சரசு, "என் மேல் மட்டும் வேண்டிய கோபம் இருக்கிறதோ, இல்லையோ?” என்றாள் ஆவேசத்துடன்.

"உங்கள் மேல் எனக்குக் கோபம் ஒன்றுமில்லை மன்னி!" என்றாள் லலிதா.

என்னால் தாங்க முடியவில்லை. சரசுவின் கையை பிடித்துக் கரகரவென்று இழுத்துக் கொண்டு போய் கீழே விட்டேன். அதற்கு மேல் ஒரு நிமிஷம் கூடத் தாமதிக்காமல் உடனே சென்று லலிதாவுக்கென்று ஒரு புடவை வாங்கிக் கொண்டு வந்தேன். அதைக் கண்டதும் எரிகிற தீயில் எண்ணெயை விட்டது போலிருந்தது, சரசுவுக்கு!- ஆனால் அந்தக் கோபத்தை நல்ல வேளையாக என் மீதோ,