பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்பும் அருளும்

ங்கள் கடைவாயிலில் தினசரி 'மல்லு'க்காக வந்து மல்லுக்கு நிற்பவர்களில் அந்த ஏழை சிறுமியும் ஒருத்தி, வயது ஏழெட்டுத்தான் இருக்கும். பெயர் என்னவோ, தெரியவில்லை.

நானும் அவளை நாலைந்து நாட்களாகப் பார்த்துக் கொண்டு வருகிறேன்; ஒரு நாளாவது அவளால் எங்கள் கடையிலிருந்து மல் வாங்கமுடிவதில்லை. காரணம்'க்யூ' வரிசையில் அவள் கடைசியில் நிற்க நேர்ந்து விடுவதுதான்!

அவள் என்னமோ ஒவ்வொரு நாளும் முன்னால் நிற்கப் பிரயத்தனம் செய்துதான் வந்தாள்; முடிந்தால்தானே? - ஆடை அலங்காரங்களில் பார்ப்பதற்கு ஒரு மாதிரியாயிருக்கும் அச்சிறுமியை மற்றவர்கள் ஒதுக்கித் தள்ளி விடுவது வழக்கம். அவளும் அவர்களுடைய ஏச்சுப் பேச்சுக்களுக்குப் பயந்து ஒதுங்கிவிடுவது வழக்கம்.

ஒரு கஜம் மல்லின் விலை ஒன்பதணா நாலுபை. தினசரி இத்தனை 'பீஸ்'கள்தான் விற்கலாம். ஆள் ஒன்றுக்கு இத்தனை கெஜந்தான் கொடுக்கலாம் என்று சர்க்கார் திட்டம் செய்திருந்தார்கள். அவர்களுடைய திட்டப்படி எங்கள் கடைக்கு வந்து தினசரி மல் வாங்கும் ஒவ்வொரு வரின் விலாசத்தையும் நாங்கள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். பரிசோதனை அதிகாரிகள் வந்து பார்வையிடும் போது அவர்களுக்குக் காட்ட வேண்டும். இதனால் என் அப்பாவின் உத்தரவுப்படி எத்தனையோ பொய் விலாசங்களை நான் எழுத வேண்டியிருந்தது. ஏன் தெரியுமா? அவ்வாறு எழுதும் விலாசதாரர்களுக்கெல்லாம் மல்விற்றது போல் நாங்கள் அதிகாரிகளிடம் காட்டிக் கொள்வோம். அவர்களுக்கு விற்காத மல்லை அமித லாபத்துக்கு விற்போம் - எப்படியாவது மல் கிடைத்தால் சரி என்று நினைக்கும் வசதியுள்ள சிலர், கெஜம் ரூபாய் ஒன்று, ஒன்றரை என்றாலும் வாங்கிக் கொள்வார்கள்.

எனினும் எல்லாவற்றையுமே கறுப்பு மார்க்கெட்டில் விற்று, சர்க்கார் அதிகாரிகளின் கண்ணில் ஒரேடியாக மண்ணைவாரிப் போட எங்களுக்குக் கொஞ்சம் பயம். அதனால் தினசரி கட்டுப்பாட்டின் விலைப்படி ஒரு சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்கு 'இல்லை' என்று சொல்லி விடுவோம். அந்த 'இல்லை'என்ற