பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பும் அருளும்

405

"நாளைக்கு கொடுக்கிறேன் என்று சொல்வது! அதற்காக குழந்தையை அடித்தால் வந்துவிடுமா?"

"நீயும் உன் குழந்தையும் நாசமாய்ப் போங்கள்; சொற்படி நடக்காத பிள்ளை எனக்கு வேண்டாம்!"

கதைகளில் நிகழும் சில சம்பவங்களை நம்மால் நம்ப முடிவதேயில்லை. ஆனால் அதே மாதிரி சம்பவங்கள் சில நமது வாழ்க்கையில் நிகழும்போது, அவற்றை நம்மால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்?

அன்றோ நல்ல வெண்ணிலவு; கலங்கிய, மனத்துடன் நான் கால்கள் போன வழி நடந்துகொண்டிருந்தேன்.

அப்படியென்ன, நாம் செய்யத் தகாத காரியம் செய்து விட்டோம்? ஓர் ஏழைச் சிறுமியிடம் இரக்கம் காட்டியதா குற்றம்? அதுவும் காசை வாங்கிக் கொண்டுதானே இரக்கம் காட்டினோம். இதற்கா இத்தனை அமர்க்களம்?-இந்தக் கோடை விடுமுறை என்று ஒன்று ஏன்தான் வந்து தொலைந்ததோ? அது வந்திராவிட்டால் நாம் ஏன் அந்த நாசமாய்ப் போன கடையில் உட்கார்ந்திருக்கப் போகிறோம்? அந்தச் சிறுமியிடந்தான் ஏன் இரக்கம் காட்டியிருக்கப் போகிறோம்? அப்பாதான் இப்படி ஏன் கோபித்துக் கொண்டிருக்கப் போகிறார்?

இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே சென்ற என் கண்களுக்கு 'ஓடைத் தெரு’ என்று பொறிக்கப் பட்டிருந்த தெருப் பலகை ஒன்று காட்சியளித்தது. பேதலித்ததிலிருந்து நான் ஒரு காரணமும் இல்லாமல் அந்தத் தெரு வழியே சென்றேன். மனச்சோர்வினால் அங்கே பூட்டிக்கிடந்த ஒரு வீட்டுத் திண்ணையை என் கால்கள் தஞ்சமடைகின்றன. 'யோக்கிய தாம்ச'த்தைக் கூடப் பொருட்படுத்தாமல் அந்தத் திண்ணையின்மேல் உட்கார்ந்தேன். கதவில் எழுதப்பட்டிருந்த '9' என்ற இலக்கம் என்னைக் கவர்ந்தது. அதைக் கண்டதும், "இந்த வீட்டுச் சிறுமியால்தானே நமக்கு இந்தக் கஷ்டம்?"என்று எண்ணி என்மனம் இடிந்தது.

"என்னடா, பூட்டை உடைப்பதற்கு யோசனையோ?" திடுக்கிட்டு நான் திரும்பிப் பார்த்தேன். யாரோ ஒருவர் வந்து எனக்கு எதிரே நின்றுகொண்டிருந்தார். தலைவிரி கோலமாயிருந்த என்னை அவர் திருடனென்றும் தீர்மானித்து விட்டார் போலும்!