பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

410

விந்தன் கதைகள்

கதி அவர்களுக்கும் வராதா?" என்றெல்லாம் அவள் கலங்க ஆரம்பித்துவிட்டாள்.

"வேண்டாம் அம்மா! அவர்களுக்கும் அந்தக் கதி வரவேண்டாம். நல்லதைத்தான் சொல்கிறார்கள்; நன்றாயிருக்கட்டும்" என்றேன் நான்.

அவள் சமாதானம் அடையவில்லை. அந்த வியாகூலத்தால் இரண்டு நாட்களுக்கெல்லாம் படுக்கையாய்ப் படுத்து விட்டாள். வாழ்க்கையில் அவள் வைத்திருந்த கடைசி நம்பிக்கை எப்படியாவது ராணியை எனக்குக் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பதுதான். அது முறிந்து விடவே, அவள் இதயம் தாங்க முடியாத அதிர்ச்சியை அடைந்துவிட்டது.

இத்தனைக்கும் 'ஏழை' என்ற ஒரே ஒரு குறையைத் தவிர ரத்னா வேறொரு குறையும் இல்லாதவள். அந்தக் குறைக்குக் கூடக் காரணம் அவள் அல்ல; எல்லாம்வல்ல இறைவன், ஏழை பங்காளன்தான். அதைக் காரணமாக வைத்துக் கொண்டுதானே நேற்று அம்மா அவளைத் தட்டிக் கழித்தாள்? அதேபோல்தான் என்னையும் 'ஏழை' என்பதற்காக அவர்கள் தட்டிக் கழிக்கிறார்கள்!

இது தெரியாமல் அனாவசியமாக அதிர்ச்சியடைந்து அம்மா இப்போது உடம்பைக் கெடுத்துக் கொண்டாளே, அதற்காக அவதிப்படுவது யார்? அம்மாவின் அருகில் இருந்து நாம் சிருஷ்ஷை செய்து கொண்டிருந்தால் சம்பளம் கொடுப்பவன் சும்மா இருப்பானா?

எனக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. இதற்கிடையில் அம்மாவோ நாளுக்கு நாள் அப்படியிப்படி நகரக்கூட முடியாதவளாகி விட்டாள். அவளை விட்டுவிட்டு நான் எப்படி வேலைக்குச் செல்வது? ஒரு வாரம் லீவு எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

உள்ளே யாரோ நடமாடும் சத்தம் கேட்டது-என்ன! அதற்குள் அம்மா எழுந்து நடமாட ஆரம்பித்து விட்டாளா? இல்லை; என்னுடைய காலடிச் சத்தத்தைக் கேட்டதும் ரத்னாதான் வால் நட்சத்திரத்தைப் போல் விரைந்து சென்று மறைந்தாள்-ஆம், நீண்ட ஜாடையாக அவள் ஆடி அசைந்து ஓடியது எனக்கு அப்படித்தான் தோன்றியது!

அதனால் ஏற்பட்ட உள்ளக் கிளுகிளுப்பைப் பெரு மூச்சின் வாயிலாக மெள்ள வெளியேற்றி விட்டு நான் அம்மாவின் அருகில் உட்கார்ந்தேன். நீலி சுடச்சுடக் காப்பியைக் கொண்டுவந்து எனக்கு