பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடிந்தது கவிதை; முடிந்தது மேற்கோள்! சிறிதிலும் சிறிதான இந்தக் காலத்தில் கனவுகள் பெரிதாக இருக்கின்றனவோ என்னவோ, கதைகள் பெரிதாக இருக்கின்றன. உதாரணத்துக்கு இப்போது வரும் சிறு கதைகளைத்தான் எடுத்துக்கொள்ளுங்களேன்:

   கதை நிகழும் நேரத்தை எடுத்துக் காட்ட ஒரு பக்கம்; சூழ்நிலையை விவரிக்க இரண்டு பக்கங்கள்; கதா பாத்திரங்களின் குணாதிசயங்களைப் படம் பிடித்துக் காட்ட" நாலு பக்கங்கள்; கதையை ஆரம்பித்து, நடத்தி, முடிக்க எட்டுப் பக்கங்கள்-இப்படியாகத்தானே இந்தக் காலத்தில் சிறுகதை இலக்கியம் வளருகிறதோ இல்லையோ, அதன் பக்கங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. 'பக்கப் பசி மிகுந்த பத்திரிகைக்காரர்களுக்கு இது பெரிதும் பயன்படுவதோடு, சமயத்தில் அதையே 'குறுநாவல் என்று ஒரு போடு போட்டு வைக்கவும், பொழுது போகாத வாசகர்களின் பொழுதைப் போக்கவும்கூட உதவுகிறது.
   ஆயினும் அவை சிலருக்குக் கொட்டாவிக் கதைகளாக அதாவது, படிக்க ஆரம்பிக்கும்போதே கொட்டாவிக்கு மேல் கொட்டாவியாக வரவழைத்துக் கொண்டேயிருக்கும் கதைகளாக அமைந்துவிடுவதும் உண்டு!
   அதிலும் ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது; 'ஆபத்தில்லாத தூக்க மாத்திரைகளாக அவை பயன்பட்டு விடுகின்றன அல்லவா?
   அந்தத் தொல்லைகளையெல்லாம் இந்தக் குட்டிக் கதைகளால் யாருக்கும் ஏற்படுவதில்லை. அதனாலேயே சிறிதினும் சிறிதான இந்தக் காலத்தில் அரிதினும் அரிதான தங்கள் நேரத்தை வீணாக்க விரும்பாத வாசகர்கள் பலருக்கு நாவல்களைவிட, சிறுகதைகளைவிட, குட்டிக்கதைகள்தான் அதிகம் பிடிக்கின்றன. ஏனெனில், அவற்றைப் படிப்பதற்காக அவர்கள் செலவிடும் நேரம் குறைவு; அடையும் பலனோ அதிகம்.