பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63. புகழரசி

காலதேவன் வழக்கம்போல் வான வீதியிலே பவனி வந்துகொண்டிருந்தான். எழில் மிகுந்த புகழரசி மணம் மிகுந்த மலர் சூடி அவனுக்கு எதிரே வந்தாள்.

வரையறையற்ற வயதானபோதிலும் வற்றாத இளமையுடன் விளங்கிய அந்த வானுலகவாசிகள் இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகை பூத்தனர்.

“வா, வா! நெடுநாட்களாக உன்னை நான் தேடிக் கொண்டிருந்தேன்; எதிர்பாராத விதமாக உன்னை இன்று சந்தித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!” என்றான் காலதேவன்.

“ஏனாம்?” என்று பெண் குலத்துக்கே உரித்தான நெளிவு குழைவுகளுடனும், அங்க அசைவுகளுடனும் நெஞ்சையள்ளும் தீங்குரலில் புகழரசி என்று பெயர் பெற்றிருந்த அந்த அழகரசி கேட்டாள். “ பூலோகத்திலுள்ள கலைஞர்களைப் பற்றி உன்னிடம் நான் சிறிது நேரம் பேசவேண்டும்; எனக்குத் தான் நிற்க நேரமில்லையென்று உனக்குத் தெரியுமே? -ஏறிக் கொள், ரதத்தில்!” என்றான் காலதேவன்.

புகழரசி மறுக்கவில்லை; ஏறிக்கொண்டாள்.

“கலைஞர்கள் இருக்கிறார்களே, அவர்கள் மிகவும் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள் - உன்னுடைய தலையை உருட்டுவதற்குப் பதிலாக அவர்கள் என்னுடைய தலையை உருட்டுகிறார்கள்!” என்று ஆரம்பித்தான் காலதேவன்.

புகழரசிக்கு விஷயம் புரிந்துவிட்டது. ஆனால் ஒன்றும் சொல்லவில்லை; சிரித்தாள்.