பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

மறுநாள் அதே முச்சந்தி; அதே கூட்டம்; அந்தக் கூட்டத்துக்கு நடுவே அதே குரங்காட்டி. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் இப்போது அவன் தாளத்துக்கு ஏற்றபடி அங்கே ஆடிக்கொண்டிருந்த குரங்கு முதல் நாள்அவனையே ஆட்டி வைக்க முயன்ற குரங்கு அல்ல;வேறொரு குரங்கு!

அதைப் பார்த்த அசட்டுக் குரங்கு தனக்குத் தானே சொல்லிக் கொண்டது:

"நம்மால் ஆடத்தான் முடியும்; ஆட்டி வைக்க முடியாதுபோல் இருக்கிறது!"

65. குறுக்கு வழி

பழக் கடைக்காரன் ஒருவன் ஒரு நாள் கொத்த வால்சாவடிக்குச் சென்று சிறிதும் பெரிதுமாக நூறு ஆரஞ்சுப் பழங்களை வாங்கிக்கொண்டு வந்தான். சிறியவற்றையெல்லாம் அவன் கூடைக்கு அடியில் போட்டான்; பெரியவற்றை அவற்றுக்கு மேலே அழகாக அடுக்கி வைத்தான்.

அவன் அவ்வாறு செய்தது சிறிய பழங்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே, "அக்கிரமம்!" என்று அவற்றில் ஒன்று முணுமுணுத்தது.

அநியாயம்! என்று சிணுசிணுத்தது இன்னொன்று.

"என்ன இருந்தாலும் நாம் சிறிய பழங்கள்தானே? பெரிய பழங்கள் நமக்கு மேலே இருப்பதுதான் அழகு,நியாயமுங்கூட!" என்றது ஒரு சாதுப் பழம்.