பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. நாகரிகம்

கீ கீ...... கூ’ என்று கத்தின, கூட்டுக்குள்ளிருந்த குஞ்சுகள்.

‘என் அருமைக் குஞ்சுகளா, ஏன் இப்படிக் கத்துகிறீர்கள்?’ என்று கேட்டது, அவற்றுக்கு இரையூட்டிக் கொண்டிருந்த தாய்ப் பறவை.

“அதோ பார், அம்மா! யாரோ ஒருவன் கையில் சுருக்குக் கயிற்றுடன் மரத்தின்மேல் ஏறி வருகிறான், நம்மைப் பிடிக்க” என்றது ஒரு குஞ்சு, அவனைத் தன் அலகால் தன்னுடைய தாய்க்குச் சுட்டிக் காட்டி.

தாய்ப் பறவை சிரித்தது; “ஏன் அம்மா, சிரிக்கிறாய்?” என்று கேட்டது குஞ்சு.

“அவன் நம்முடைய கழுத்தில் சுருக்கு மாட்ட வரவில்லை; தன்னுடைய கழுத்தில் தானே சுருக்கு மாட்டிக் கொள்ள வருகிறான்!” என்றது அது.

“அட, பாவமே! அவன் ஏன் அம்மா, தன் கழுத்தில் தானே சுருக்கு மாட்டிக்கொள்ள வேண்டும்?” என்று கேட்டது இது.

“இவ்வளவு பெரிய உலகத்தில் அவனுக்கு இருக்க இடம் கிடைக்கவில்லையாம்; தின்னச் சோறு கிடைக்க வில்லையாம்......”

“அதெல்லாம் நமக்குக் கிடைக்கும்போது அவனுக்கு மட்டும் ஏன் அம்மா கிடைக்கவில்லை?”

தாய்ப் பறவை சொல்லிற்று:

“அவன் அடைந்த நாகரிகம் அப்படி! அவனும் நம்மைப்போல் இந்த உலகத்தில் எதற்கும் உரிமை கொண்டாடாமல் வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவனுக்கும் நமக்குக் கிடைப்பதுபோல் எல்லாம்