பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


ஆத்திரம் தாங்கவில்லை ஒநாய்க்கு. எனவே அது ஆட்டு மந்தைக் கூட்டத்தை நோக்கி, “ஏ அறியாமை மிக்க ஆடுகளே!" என்று தன்னைத் தானே அறிஞனாக நினைத்துக்கொண்டு குரல் கொடுத்தது.

ஆடுகள் திரும்பின; "மனிதர்கள் சொல்வது சரி தான், உங்களைப்பற்றி மனிதர்கள் சொல்வது சரிதான்" என்று அவற்றைப் பார்த்துத் தலையை மேலுங் கீழுமாக ஆட்டிற்று ஒநாய்.

"என்ன சொல்கிறார்கள், அண்ணாச்சி என்று ஏதும் அறியாததுபோல் கேட்டு வைத்தது அவற்றில் ஒன்று, கொஞ்சம் துணிந்து முன்னால் வந்து நின்று.

"கண்ணை மூடிக்கொண்டு யாராவது ஒருவரைத் தங்களைச் சேர்ந்த ஒரு கூட்டம் பின்பற்றிச் சென்றால், அந்தக் கூட்டத்தை அவர்கள் ஆட்டு மந்தைக் கூட்டம் என்று கேலி செய்கிறார்கள். அதாவது, அவர்களுக்கும் சுய புத்தி கிடையாதாம், உங்களுக்கும் சுய புத்தி கிடையாதாம்!”

"அதற்காக?"

 "தனித்து வாழுங்கள், தன்மானம் பேணுங்கள்!"

"கூடி வாழ்வது?"

 "கோழைத்தனம்!”

"உம்முடைய போதனை புதிய போதனையா யிருக்கிறதே?"

ஆம், புத்தம் புதிது தம்பி, புத்தம் புதிது! வா; பிரிந்து வா! நல்லவனுக்கு இந்த உலகத்தில் பயமும் இல்லை; பகைவனும் இல்லை. வா, பிரிந்து வா!" என்று அதை அழைத்தது ஒநாய்.

"வருகிறேன்; ஆனால் ஒரு நிபந்தனை" என்றது ஆடு.