பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



13. சட்டம்

பஞ்சத்தின்மேல் ஏறி, பசி ஊர்வலம் வந்து கொண் டிருந்தது.

"இனி எனக்கு இங்கே இடமில்லை!" என்றது அன்பு.

"எனக்கும் அதே கதிதான்!” என்றது பண்பு.

வெட்கம், "இனி என்னை யார் பொருட்படுத்தப் போகிறார்கள்?" என்றது வேதனையுடன்.

வேட்கை, “ரொம்ப நல்லதாய்ப் போயிற்று; நீ என்று தொலைகிறாயோ, அன்றுதான் எனக்கு நிம்மதி!' என்றது மகிழ்ச்சியுடன்.

இதைக் கேட்டுக்கொண்டே வந்த மானம், "மனிதன் போகிற போக்கைப் பார்த்தால் என்னைக்கூடத் துறந்து விடுவான் போலிருக்கிறது!" என்றது பெருமூச்சுடன்.

"உனக்கே அந்தக் கதி என்றால், எனக்கு என்ன கதி?" என்றது மரியாதை.

அப்போது ஈகை தலை குனிந்தபடி அங்கே வர, "உன்னுடைய நிலையும் அதே நிலைதானா?” என்று கேட்டது இரக்கம்.

"அதில் வேறு சந்தேகமா?" என்றது பொய்.

"இல்லை அப்பனே, இல்லை; என்னைப் பொறுத்த வரை அதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஏனெனில், "பசி வந்திடப் பத்தும் பறந்து போம்" என்பது எனக்குத் தெரியும்" என்றது உண்மை.