பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56


கடவுள் சொன்னார்:

"மாட்டுக்குப் பகைவர்களைச் சிருஷ்டித்தவன் நான்; ஆகவே அவற்றினிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக அதற்கு நான் கொம்பைக் கொடுத்தேன். மனிதனுக்கு நான் எங்கே பகைவர்களைச் சிருஷ் டித்தேன், அவனுக்குக் கொம்பைக் கொடுக்க? அவனுக் குள்ள பகைவர்களெல்லாம் அவனுக்கு அவனாகவே சிருஷ்டித்துக் கொண்டவர்களல்லவா?”

荔莎莎

43. நன்றி!

வசந்தம் வந்தது.

ஆற்றங்கரையிலிருந்த ஆலமரம் துளிர்த்துப் பூத்துக் காய்த்துப் பழுத்துக் கனிந்தது.

பறவையினங்கள் அனைத்தும் 'கா, கூ, கீ’ என்று குரல் கொடுத்துக்கொண்டே வந்து அதில் குடியேறின; பசியாற உண்டு, களித்து, உறங்கி விழித்தன.

வசந்தம் சென்றது.

ஆலமரத்தில் துளிர் இல்லை, பூ இல்லை, காய் இல்லை, கனியும் இல்லை!

பறவைகள் பார்த்தன; பசிக்கு இரை தேடிப் பறந்தன.

அருகிலிருந்த அரசமரம், "என்ன நன்றி கெட்ட பறவைகள் அவைகள்! எல்லாம் இருக்கும் வரைதான் அவற்றின் உறவுபோலும்?" என்றது ஆலமரத்தினிடம்.