பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50. கடமை

முதல் நாள் மாலை அழகுச் சாதனங்கள் அடங்கிய அழகான பெட்டியொன்றை வாங்கிக்கொண்டு வந்து காதலியின் கையில் கொடுத்தான் காதலன்.

அவள் புன்னகை பூத்தாள்; அந்தப் புன்னகையிலே அவன்தன் கவலைகளையெல்லாம் மறந்தான்.

மறுநாள் பட்சணங்கள் நிறைந்த பொட்டண மொன்றைப் பையில் வாங்கிப் போட்டுக்கொண்டு வந்து அவள் கையில் கொடுத்தான் அவன்.

அவள் புன்னகை பூத்தாள்; அந்தப் புன்னகையிலே அவன் தன் கவலைகளையெல்லாம் மறந்தான்.

அடுத்த நாள் அவன் வரும்போதே, "இன்று என்ன வாங்கிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்?" என்று நீண்ட சடை ஆட, காதில் அணிந்திருந்த குண்டலங்கள் ஆட, அவள் ஓடோடியும் வந்து கேட்டாள்.

"ஆப்பிள்! அதன் வண்ணத்தோடு இன்று உன்னுடைய கன்னத்தின் வண்ணத்தை ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறேன்!” என்றான் அவன்.

அவள் புன்னகை பூத்தாள்; அந்தப் புன்னகையிலே அவன் தன் கவலைகளையெல்லாம் மறந்தான்.

அதற்கடுத்த நாள், "இன்று...?" என்று கொஞ்ச லோடு கேட்டுவிட்டு அவள் நிறுத்தினாள்.

"ரோஜாப் பூ!" என்றான் அவன்.

அவள் புன்னகை பூத்தாள்; அந்தப் புன்னகையிலே அவன் தன் கவலைகளையெல்லாம் மறந்தான்.