பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


அதற்கும் அடுத்த நாள். "இன்று என்ன வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்?-எங்கே காட்டுங்கள், பார்க்கலாம்?" என்று செவ்விதழ்கள் விரிய, வெண் பற்கள் தெரிய ஆவலுடன் கேட்டுக்கொண்டே வந்து அவனுக்கு அருகே நின்றாள் அவள்.

அன்று அவனிடம் காசில்லை; ஆகவே கையை விரித்தான்.

அவ்வளவுதான்; அவளுடைய வெண் பற்களைச் செவ்விதழ்கள் மூடின. அன்று ஏனோ அவள் புன்னகை பூக்கவில்லை!

இதனால் தன் கவலைகளை மறப்பதற்காக அவன் தோட்டத்துப் பக்கம் சென்றான்; அங்கிருந்த ஒரு முல்லை மலரை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டே ஏதோ யோசித்தபடி நின்றான்.

"நானும் ஒரு மலர்தானே? என்னைப் பார்ப்பதற்குப் பதிலாக அந்த மலரை ஏன் பார்க்க வேண்டும்?" என்றாள் அவள்.

அவன் சொன்னான்: “என்னிடமிருந்து எதையும் எதிர்பாராமலே இந்த மலர் என்னைக் கண்டு புன்னகை பூக்கிறது!”

அவள் சொன்னாள்: "மழையை எதிர்பார்க்காமல் அந்த மலரும் யாரைக் கண்டும் புன்னகை பூப்பதில்லை!"

荡荡,荔