பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73


கிரகஸ்தர் குறுக்கிட்டு, "ஆமாம், இப்பொழுது பிடிக்காமற் போய்விட்டன. அதனால்தான் அவற்றை எடுத்துக் குப்பையில் வீசி எறிந்து கொண்டிருக்கிறேன்!” என்றார் அலுப்புடன்.

வந்தவர் அதற்குமேல் பேசவில்லை. "சரி, வேலை ரொம்ப அதிகம் போலிருக்கிறது; சாயந்திரம் வந்து சாவ காசமாகப் பேசிக் கொள்கிறேன்" என்று சொல்லி விட்டு நழுவினார்.

கிரகஸ்தர், "அவசியம் வாருங்கள்!" என்று அவருக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

சொன்னது சொன்னபடி அன்று மாலை வந்த நண்பரை, "வாருங்கள், வாருங்கள்!" என்று முக மலர்ச்சியுடன் வரவேற்று உபசரித்தார் கிரகஸ்தர்.

"வேலை முடிந்துவிட்டது போலிருக்கிறது; வேண்டாத சாமான்களையெல்லாம் எடுத்து வெளியே எறிந்து விட்டீர்கள் போலிருக்கிறது!" என்று கூறிக் கொண்டே நாற்காலியில் அமர்ந்தார் நண்பர்.

"ஆமாம்; இன்னும் ஒரே ஒரு சாமான்தான் பாக்கி யிருக்கிறது. அதை எடுத்து வெளியே எறிய என்னால் முடியவில்லை!" என்றார் கிரகஸ்தர்.

"அது என்ன அப்படிப்பட்ட சாமான்?" என்று நண்பர் அவரை நெருங்கி ஆவலுடன் கேட்டார்.

"வேறு என்னவாயிருக்க முடியும்? - என் மனைவி தான்!" என்றார் கிரகஸ்தர் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே.

அவ்வளவுதான்; “எங்கே அப்பளக் குழவி?” என்று உள்ளே யாரோ உறுமும் சத்தம் கேட்டது.

வந்தவர் எழுந்து பிடித்தார், ஒட்டம்!

荔,荔莎