பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அளவில்லை; போடுகிறோம்

தின்னச் சோறு, உடுக்கத் துணி, இருக்க வீடு, கேட்க இசை, பார்க்கக் காட்சி - இவற்றோடு படிக்க பத்திரிகைகளோடு புத்தகமும் வேண்டியதுதான் என்று தீர்மானித்தாலும் தீர்மானித்தீர்கள் - பிடித்தது தலைவலி, தமிழ் களஞ்சியத்துக்கு!


நிமிஷத்துக்கு நிமிஷம் உரையாசிரியர்களும், தொகுப்பாசிரியர்களும், பதிப்பாசிரியர்களும் தோன்றித் தோன்றி, தமிழ்க் களஞ்சியத்திலிருந்து அள்ளி அள்ளி, தமிழ்ப் பெரு மக்களான உங்களுக்கு வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.


அதற்கேற்றாற்போல் களஞ்சியத்திற்குச் சொந்தக்காரர்களான சங்ககாலப் புலவர்களோ, சங்க காலத்தோடு சமாதியடைந்துவிட்டார்கள்; அவர்களுடைய ஏட்டைத் தேடி எடுத்து வைத்தவர்களோ அவர்களுடன் ஐக்கியமாகி விட்டார்கள். அப்புறம் கேட்க ஆள் ஏது?-அடி கொள்ளை, கொள்ளையோ கொள்ளைதான்!


இதனால் தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் அறிவுப் பஞ்சம் வந்து விடாதென்றாலும், அதனால் களஞ்சியமே காலியாகிவிடக் கூடாதல்லவா? அதற்காகத்தான் காலியாகும் களஞ்சியத்துக்கு ஏதாவது போட வேண்டுமே என்று நானும் பிரசுரத்தாரும் நினைத்தோம்: அதன் விளைவே இச்சிறு நூல்.


போடுவது நாழியாயிருந்தாலும் சாகுபடி சொந்தச் சாகுபடி; இது உங்களுக்குப் பிடித்திருந்தால் இதைத் தொடர்ந்து இன்னும் பல புத்தகங்கள் வெளியாகும்.


மற்றபடி வேறொன்றும் சொல்ல விரும்பவில்லை நாங்கள்; அதற்குத்தான் நீங்கள் இருக்கிறீர்களே!

- விந்தன்