பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79


என்னால் சகிக்க முடியவில்லை; அதனால்தான் கூவிக் கொண்டிருக்கிறேன்!” என்று சொல்லி விட்டு, "குக்கூ குக்கூ!" என்று மீண்டும் அது வருந்தி வருந்திக் கூவிற்று.

"ரொம்ப அழகாய்த்தான் இருக்கிறது, உங்கள் காதலும் கதறலும்!" என்று அலுத்துக்கொண்டே சென்று,காடெல்லாம் திரிந்து, நாளெல்லாம் அலைந்து அந்தக் குயிலின் காதலனை எப்படியோ கண்டுபிடித்துக் கொண்டு வந்து, அதனுடன் சேர்த்து வைத்தது மயில்.

மறுநாள்-அந்தி மயங்கிக் கொண்டிருந்தது; இருள் கவிந்து கொண்டிருந்தது. எல்லாப் புள்ளினங்களும் தங்கள் தங்கள் கூடுகளைத் தேடி வந்து சேர்ந்து விட்டன - எங்கும் நிசப்தம்.

"அப்பாடி! இன்றாவது நிம்மதியாகத் தூங்கலாம்!" என்று எண்ணி மயில் லேசாகத் தன் கண்களை மூடிற்று.

அவ்வளவுதான்; அன்றும் ஏனோ 'குக்கூ, குக்கூ' என்று குயில் கூவ ஆரம்பித்துவிட்டது.

மயிலுக்கு ஒன்றும் புரியவில்லை. வியப்புடன் அது குயிலுக்கு அருகே சென்று, "உன் காதலனைத்தான் கொண்டு வந்து சேர்த்துவிட்டேனே, இன்னும் என்ன வருத்தம், உனக்கு?' என்று கேட்டது.

"அதை ஏன் கேட்கிறாய், போ! பிரிந்திருக்கும் போது வந்து சேரவில்லையே என்று வருத்தம்; வந்து சேர்ந்த பிறகு பிரியாமலிருக்க வேண்டுமே என்று வருத்தம்!" என்று சொல்லிவிட்டுக் குயில் மீண்டும் மீண்டும் "குக்கூ, குக்கூ!" என்று கூவிக் கொண்டேயிருந்தது!

荔,荔,荡