பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காலம் சிறிது!
   இந்தத் தலைப்பைக் கண்டதும், 'அநியாயம், அக்கிரமம்! வைத்திய வசதிகள் பெருகினாலும் பெருகின, மனிதனின் ஆயுள் காலம் அனுமார் வால்போல் வளர்ந்து விட்டதே, அவன் சீக்கிரம் செத்துத் தொலையமாட்டேன் என்கிறானே, குறைந்தபட்சம் குழந்தை குட்டிகள் பெற்றுக் கொள்வதையாவது கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்றால் கேட்க மாட்டேன் என்கிறானே' என்று நாங்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது காலமாவது, சிறிதாவது?’ என்று உணவுப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக உயிரை விட்டுக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் தயவு செய்து அடிவயிற்றில் அடித்துக்கொள்ள வேண்டாம். இது அந்த உலகத்தைப் பற்றியதல்ல; இலக்கிய உலகத்தைப் பற்றியது.
   'காலம் சிறிது!’ என்று நான் இங்கே எதற்காகச் சொல்ல வந்தேனென்றால், இது சினிமா யுகம்; இந்த யுகத்தில் எந்த எழுத்தாளானாவது, எதற்காகவாவது மேற்கோள் காட்ட நேர்ந்தால்கூட எதைக் காட்டுகிறான்? கம்பனையும் அவன் கவிதையையுமா காட்டுகிறான்? வள்ளுவனையும் அவன் குறளையுமா காட்டுகிறான்? சினிமாக் கவிஞனையும் சினிமாப் பாடலையும்தானே காட்டுகிறான்! அந்த நவீன சம்பிரதாயத்தைப் பின்பற்றி நானும் ஒரு சினிமாப் பாடலை இங்கே மேற்கோளாகக் காட்டுகிறேன்:
”காலம் சிறிது, கனவுகள் பெரிது,
கவலைப்படுவது ஏன் மனது?”