பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வண்ண வண்ணக் கோலங்களை வாரி வழங்குகின்ற வசந்த காலம் வந்துவிட்டால் போதும். எகிப்தியர்களுக்கோ இனம் புரியாத இன்பம் இதயமெங்கும் பரவத் தொடங்கி விடும். இயற்கை எழில் சிந்துகிறது என்பதனாலா என்று கேட்டால், அதைவிட முக்கியமான காரணம் வேறொன்றும் இருக்கிறது. இன்பத்துள் இன்பங்காணுகின்ற அவர்கள், வசந்த விழா எடுக்கிறார்களா என்றால் நிலை அப்படித்தான். இறந்துபோன இறைவன் மீண்டும் உயிர்த்தெழுகின்றான் என்று கொண்டாடும் கோலாகலமான விழா அது.

இறைவனாவது இறந்து போவதாவது? என்று கேட்க வேண்டும்போல் இருக்கிறதல்லவா! எகிப்து நாட்டிலே அப்படித்தான் சம்பிரதாயம். ஆமாம். எகிப்தியரின் மதம் அப்படி, அது இரு கூறாக அமைந்திருந்தது. நன்மை என்று ஒருபுறமும். தீமை என்று மறுபுறமும் பிரிக்கப்பட்டிருந்ததோடு, அவைகளைக் காக்கக் கடவுள்களும் தலைமை ஏற்று இருந்தனர்.

தீமையைக் காக்கின்ற கடவுளின் பெயர் ‘செட்’ என்பது. நன்மையைக் காக்கின்ற கடவுளின் பெயர் ‘ஓசிரிஸ்’ என்பது. இரு கடவுள்களுக்கும் எப்பொழுதும் போராட்டந்தான். உலகை யார் ஆள்வது ? தலைமை எற்பது என்ற அந்த ஓயாத போரில், மழைக் காலம் வந்துவிட்டால், ‘செட்’ கடவுளுக்கு வலிமையும் வேகமும் அதிகமாகிவிடும். போரில் ஓசிரிசைக் கொன்றுவிடும். உயிரிழந்த ஓசிரிஸ் வசந்த காலம் வருகின்றவரை இறந்தபடியே இருந்து, மீண்டும் உயிர் பெற்று வந்துவிடுகிறது என்பது மக்களின் மாறாத நம்பிக்கையாகும்.


இவ்வாறு. ஓசிரிஸின் உயிர் நீங்கும் கதையையும், உயிர்த்தெழுகின்ற நிலையையும், நையாண்டி நாடகமாக நடத்த முற்பட்டு, அதன் மூலம் ஓசிரிஸின் உன்னதமான