பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அடுக்கி வைத்து, எட்ட இருந்து அதைப் பந்தால் குறி பார்த்து மடிப்பதுபோல, பல பந்துகளை மேசை மேலே வைத்து அதன் முனை கொண்ட கம்பினால் குத்திக் குழியிடை விழவைக்கின்ற 'பிலியர்ட்ஸ்' (மேசைக் குழியாட்டம்) கேரம் போன்ற ஆட்டங்கள் குறிவைத்தாடுகின்ற ஆட்டத்திற்கு உதாரணமாய் விளங்குகின்றன.

இவ்வாறு மனித இனம் மலர்ந்ததிலிருந்தே பிறந்து. வளர்ந்து, மனிதரை மகிழவைக்கும் உற்ற தோழனாய், உயிர் காக்கும் நண்பனாய், குலம் காக்கும் வழிகாட்டியாய், குணம் வளர்க்கும் அன்னையாய், இன்ப நலம் காட்டும் ஆசானாய் விளையாட்டுக்கள் வருகின்றன.

நம்மைக் காக்க வந்த விளையாட்டுக்களை, நச்சுப்பொய்கை என்று எண்ணி நடுங்காமல் நா கூ சாமல் புறங் கூறிப் பழித்துப் பேசும் பண்பினை ஒழித்து, மனக்கவலை மாற்றும் மாமருந்தாய், இன ஒற்றுமை வளர்க்கும் எழில் துணையாய் எண்ணி, இளைஞர்களை அன்றாடம் விளையாட வைத்து அவர்களுக்கு உற்சாகம் ஊட்டி, ஆன்ற கலைகளே வளர்த்துக் கொள்ள அனுபவத்தைக் கூட்டி, பாரத இனம் பாரிலே பெருமை கொள்ளும் வகையால் விளையாட்டு வீரர்களை உண்டாக்கும் நிலையில் நாம் வாழ வேண்டும் என்பது நல்லோரின் பேரவா!

நாமதைக் காப்போம்; நாளும் உழைப்போம், நெடும் புகழ் சேர்ப்போம்!