பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
101

ஒரு உடலாளருக்கு 6 முறை எறிகின்ற வாய்ப்புகள் உண்டு. அந்த ஆறு எறிகளில் அதிகதூரம் எறிந்த எறி தான் எறிந்தவரின் கணக்கில் சேர்க்கப்படும்.

15.கிழக்குமுறைத் தாண்டல் (Eastern Roll)

உயரம் தாண்டும் முறையில், பக்கவாட்டிலிருந்து ஓடி வந்து குறுக்குக் கம்பத்திற்கு அருகில் இல்லாத மற்றொரு காலால் தாண்டுவதற்காக உந்தி எழும்பி, குறுக்குக் குச்சியைத் தாண்டி மறுபுற மணற் பரப்பில் குதிக்கும் பொழுது, தாண்ட உந்திய காலாலேயே மணற்பரப்பில் ஊன்றும் முறை தான் கிழக்கு முறை தாண்டல் என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் தாண்டும் முறையைக் கண்டு பிடித்தவர் ஸ்வீன் (Sweeney) என்பவராவார்.

16. குறுந்தடி மாற்றும் பகுதி (Excharge zone)

தொடரோட்டப் போட்டியின் போது,ஓட்டப் பந்தயப் பாதையில் குறிக்கப்படும் பகுதியாகும் இது.

ஒரு ஓட்டக்காரரிடமிருந்து மற்றொரு ஓட்டக்காரர் குறுந்தடியை வாங்குகிற நேரத்தில். குறிப்பிட்ட எல்லையைக் கடந்து முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ போய் விடக்கூடாது என்பதற்காக, குறிப்பிட்ட எல்லைக் கோட்டில் இருந்து முன் புறம் 10மீட்டர் தூரமும் , பின்புறமாக 10 மீட்டர் தூரமும் குறிக்கப்படும் பகுதி தான் குறுந்தடி மாற்றும் பகுதி யாகும். இந்த 20 மீட்டர் எல்லையைக் கடந்து குறுந்தடி மாற்றப்பட்டால் அது விதிமீறலாகும். அந்த அணி போட்டியிலிருந்து விலக்கப்படுகிற தண்டனையைப் பெறும்.