பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135


29. ஆட்டக் கோல் (Stick)

ஆட்டத்தில் பங்கு பெறும் ஒவ்வொரு ஆட்டக்காரரும் ஒரு கோல் கொண்டு வர வேண்டும். ஒரு கோலின் மொத்த எடை 28 அவுன்சுக்கு மிகாமலும், 12 அவுன்சுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும் பெண்கள் ஆட்டத்திற்குரிய கோலின் எடை 28 அவுன்சுக்கு மிகாமலும், 12 அவுன்சுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும். அந்தக் கோலின் மொத்த உருவ அமைப்பு உட்புறத்தில் 2 அங்குலம் விட்டமுள்ள ஒரு வளையத்திற்குள் நுழையுமாறு அமைந்திருக்க வேண்டும். கோலின் இடது கைப்பக்கம் தட்டையாக இருக்க வேண்டும். கோலின் மேற்புறம் வட்டமான மேடான பாகமாக இருக்கும். பந்தைத் தட்டையான பாகத்தினால் தான் அடித்தாட வேண்டும்.

30. அடிக்கும் வட்டம் (Striking Circle)

ஒவ்வொரு இலக்கிற்கும் முன்பாக, 8 அங்குல அகலத்துடன் 4 கெஜ நீளமுள்ள வெள்ளை நேர்க்கோடுகளால் ஆகி, கடைக் கோட்டிலிருந்து 16 கெஜ நீளத்தால் அதாவது இலக்குக் கம்பத்தை மையமாக வரையப்பட்ட இரு புறமும் வரும் இரண்டு 16 கெஜ நீளக்கோட்டில் இணைக்கப்பட்ட பகுதியே அடிக்கும் வட்டம் ஆகிறது.

16 கெஜ கால் வட்டக் கோடுகளாலும், 4 கெஜ நேர்க் கோட்டாலும், கடைக் கோட்டாலும் சூழப்பட்டப்பரப்பே அடிக்கும் வட்டம் ஆகும்.

31. மாற்றாட்டக்காரர்கள் (Substitutes)

ஆட்ட நேரத்தில், இரண்டு மாற்றாட்டக்காரர்கள் வரை மாற்றிக் கொண்டு ஆட, ஒரு குழுவுக்கு அனுமதி உண்டு.