பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

8


அதன் பின்னர், காலம் மாற மாற, விளையாட்டுப் போட்டிகளில் நுணுக்கமும் தேர்ச்சியும் மிக மிக, அத்லெட் என்ற சொல்லுக்கு வேறு பொருளைத் தரத் தொடங்கினர் விளையாட்டு வல்லுநர்கள்.

அத்லெட் என்றால் உடற் பயிற்சிகளில் நன்கு தேர்ந்தவன், உடல்பலம் (Strength) நெஞ்சுரம் (Stamina), விரைவும் சுறுசுறுப்பும் (Agility) நிறைந்து போட்டிகளில் பங்கு பெறத் தகுந்தவன், ஆடும் விளையாட்டுக்களில் நுணுக்கங்கள் நிறைந்திருக்கும் தேர்ந்திருக்கும் கெட்டிக்காரன் என்றெல்லாம் விளக்கம் தரத் தொடங்கினார்கள்.

அவர்கள் விளக்கப்படி, நன்கு தேர்ச்சிப்பெற்ற சிறந்த உடலை உடையவன் என்கின்ற பொருளையே நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. அத்தகைய அத்லெட் என்ற சொல்லுக்குத் தமிழில் உடலாளர் என்று ஒரு புதிய சொல்லை உருவாக்கி இருக்கிறேன்.

உடல் - ஆளர் என்பது உடலாளர் ஆகிறது. உடலை சிறப்பாக ஆள்கின்ற ஆற்றல் பெற்றவரை உடலாளர் என்கிறோம்.

பேச்சை ஆள்பவரை பேச்சாளர் என்றும், எழுத்தை ஆள்பவரை எழுத்தாளர் என்றும்; வாக்கை ஆள்பவரை வாக்காளர் என்றும்; குணத்தை ஆள்பவரை குணாளர் என்றும்; மணத்தை ஆள்பவரை மணவாளர் என்றும் சொல்கின்ற மரபுப்படி, உடலாளர் என்று ஒர் சொல்லை உருவாக்கி இருக்கிறோம்.