பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


எக்சார்சைஸ் எனும் சொல் தீய தேவதைகளான பேய்களை (Demons) விரட்டும் என்பதாகும்.

எக்சர்சைஸ் என்றால், மிருகங்களை வெளியே விரட்டு, அல்லது வெளியே விடு என்பதாகும்.

Ex என்றால் வெளியே (Out) என்றும், Arcere என்றால் அடைத்து வை என்பதும் பொருளாகும்.

'உடலில் உள்ள தீய கழிவுப் பொருட்களை வெளியேற்று, அதுபோல் தீய நினைவுகளான பேய் எண்ணங்களை விரட்டு. முரட்டுத் தனமான மிருக நினைவுகளை வெளியேற்று' என்ற நம்பிக்கையில் இந்த சொல்லை உடற்பயிற்சிக்குப் பயன்படுத்தி இருந்தாலும் இருக்கலாம்.

உடற்பயிற்சியானது உடலைத் தூய்மையாக்கி, நல்ல நினைவுகளை மனதில் அடைத்து வைக்கிறது என்பது உண்மையானால், அந்த எண்ணத்தோடுதான் இந்த சொல்லும் இந்த வகையில் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்! என்றே நாமும் உறுதியாக நம்பலாம்.

5. FAN

Fan என்பதற்கு விசிறி என்று தமிழில் விளக்கமாக விமர்சனம் செய்வதை நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். 'நானும் அவருக்கு விசிறி' என்று நீங்களும் உங்களையறியாமல் பேசிக் கொண்டிருந்ததும், இப்பொழுது உங்களுடைய நினைவுக்கும் வரும்.