பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


புதிய விளையாட்டுக்களுக்கு மவுசும் பெருமையும், மக்களிடையே மாபெரும் வரவேற்பும் ஏற்படுகின்ற நேரத்தில், பழைய விளையாட்டுக்கள் என்ன செய்ய இயலும் பிரியா விடை பெற்றுக் கொண்டு புறப்பட வேண்டியதுதானே!

அது போலவே, கொஞ்சம் வலிமை மிக்க விளையாட்டுக்களான கால்பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம் எல்லாம் வசதியுள்ள பணக்காரர்கள் இடத்திலே வரவேற்பு பெறாமல் போன காலத்தில், அவர்கள் ஆடுவதற்கு எளிதாகவும், வசதியாகவும் அமைந்திருக்கக் கூடிய புதிய விளையாட்டினைப் படைப்பதில் பலர் முயன்று கொண்டிருந்தனர்.

அவ்வாறு மேற்கொண்ட முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டில் டென்னிஸ் ஆட்டமும் ஒன்று. பிரபுக்கள் குடும்பத்தினரும் அரச குடும்பத்தினரும் ஆர்வத்துடன் ஈடுபடுகின்ற தன்மையிலே அந்த ஆட்டம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த டென்னிஸ் ஆட்டத்தை உருவாக்கித் தொடங்கி வைத்தவர் மேஜர் வால்டர் கிளாப்டன் விங் பீல்டு என்பவர்.

வசதி படைத்தவர்கள் எல்லோரும் உடலை வளைத்துக் குனிந்து நிமிர்ந்து ஒரு வேலையை செய்வார்களோ எதற்கெடுத்தாலும், பக்கத்திலே ஒரு வேலைக்காரரை வைத்துக் கொண்டு, ஏவல் விட்டபடி செய்து முடித்து இன்பம் காண்பவர்கள் அல்லவா!