பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

60


25. TROPHY

விளையாட்டுப் போட்டிகளிலும், ஓட்டப் பந்தயங் களிலும் விமரிசையான நிகழ்ச்சியாக நடைபெற்று விளங்குவது பரிசளிப்பு நிகழ்ச்சியேயாகும்.

மேடையின் மீதோ அல்லது மேசையின் மீதோ பள பளக்கும் வெற்றிக் கோப்பைகளையும், வெற்றிக் கேடயங்களையும் வரிசைப்படுத்தி, பார்வைக்கு வைத்திருப்பதே கண்கொள்ளாக் காட்சியாகும்.

அந்தக் கோப்பைகளை Trophy என்றும் பெருமையுடன் கூறிக் கொள்வார்கள் விழாக் குழுவினர். இத்தகைய அமைப்பு எப்படி வந்தது? இதற்கு இந்தப் பெயர் வந்தது ஏன் என்று அறியாமலேயே அவர்கள் இருந்தாலும், அந்தப் பெயரைப் பெருமிதத்துடன் உச்சரிப்பதே ஒரு அலாதி இன்பம்தான்.

இந்த Trophy என்ற சொல் எந்த சந்தர்ப்பத்தில் தோன்றியது, ஏன் இந்த வடிவமும் உருவமும் பெற்றது என்பதனை இங்கே காண்போம்.

Trophy என்று அழைக்கப்படுகின்ற ஆங்கிலச் சொல்லானது, கிரேக்கச் சொல்லான Trope என்பதிலிருந்தே தோன்றி வந்திருக்கிறது.

Trope என்ற கிரேக்கச் சொல்லுக்கு. ஓடச் செய்தல் அல்லது விரட்டி அடித்தல் என்பது பொருளாகும். அதே சொல்லுக்கு வேறு ஒரு பொருளையும் விரித்துக் கூறுகின்றார்கள். அதாவது, போரில் அல்லது போட்டி ஒன்றில் திருப்பு முகம் காணுதல் என்பதாகும்.