பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

88


காகவே விளையாடி மகிழ்வது, மற்றவர்களையும் மகிழ்விப்பது என்பது தான் இந்த சொல்லின் முக்கிய கருத்தாகும்.

இந்தக் கருத்தின் அடிப்படையில் தான், ஆரம்ப காலத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு பெற்ற கிரேக்க வீரர்கள் கலந்து கொண்டார்கள். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள அவர்கள் மேற்கொண்ட முயற்சியும் செய்த தியாகமும் எத்தனையோ உண்டு.

பத்துமாதங்கள் தனது ஊரில் அல்லது நகரத்தில் தனிப்பயிற்சி செய்து, திறமைகளை வளர்த்துக் கொண்டு, அதையே கதி என்று வளர்ந்த வீரர்கள், பந்தயங்களில் கலந்துகொள்ள கலேநாடிகை என்னும் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, மீண்டும் ஒரு மாதம் கடுமையான உடற் பயிற்சிக்கும் ஆளாகி, உணவிலும் உறக்கத்திலும் பயிற்சியாளர்களின் ஆணைக்கும் அதிகாரத்திற்கும் அடங்கி வாழ்ந்தார்கள்.

இவ்வாறு 11 மாதம் பயிற்சி செய்து, பந்தயங்களில் வெற்றி பெற்றால் அவர்கள் பெற்ற பரிசுதான் என்ன? வெறும் மலர் வளையம் தான். ஒரிரு நாட்களில் வாடி உலர்ந்து, சருகாகிப் போகின்ற இலை தழையால் ஆன மலர் வளையம்தான்.

இதற்கா இத்தனை உழைப்பு, தியாகம், முயற்சி, பாடு என்றெல்லாம் நாம் பேசலாம். இருந்தாலும், பந்தயங்களில் கலந்து கொள்கின்ற பெருமை, பந்தயங்களின் புனிதம். அதனால் அவன் பெறுகின்ற புகழ், தாயகத்திற்குக் கிடைக்கின்ற கெளரவம் இவைதான் பெரிதாகக் கருதப் பட்டன.