பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 5

விளையாட்டுத் துறையில் இருக்கின்ற வித்தியாசமான வேற்றுமைகளையெல்லாம் விதவிதமான மாட்சிமைகளை ஒற்றுமைப்படுத்தி உலகுக்குக் காட்டவே விளையாட்டு இலக்கியம் தேவைப்படுகிறது.

விளையாட்டுகளுக்கான விதிமுறைகள், விளையாட்டு நுணுக்கங்கள்; நுண் பயிற்சி முறைகள், நூதன அணுகு முறைகள் எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்தி, ஒன்று படுத்தி, உலகுக்குத் தெளிவுபடுத்தி உதவுவதுதான் விளையாட்டு இலக்கியத்தின் வேலையாகும்.

விளையாட்டைப் புரிந்தவர்களுக்கு மட்டும் அறிந்து கொள்ளும்படி எழுதினால், அது பாதிக்கிணறை தாண்டியது போலாகிவிடும். பாமரர்களும் படித்து அறிவது போலவும், மகிழ்வது போலவும் எழுதினால் தான், பயன்படும் நூலாக இருக்கும் என்று எழுத ஆரம்பித்த நாட்களில், எண்ணினேன்.

நாடகம் எழுதுவதிலும், நடிப்பதிலும், தயாரிப்பதிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஒரு முதிர்ந்த நாடகாசிரியர், என்னிடம் ஒருமுறை சொன்னதைத் தான், எனது நூல் எழுத்துக்கு ஆதாரமாக்கிக் கொண்டேன். வழிகாட்டுதலாகவும்

வைத்துக் கொண்டேன்.

ஒரு நல்ல நாடக நடிகன் என்பவன், முகபாவம் காட்டி நடிப்பதால் மட்டும் உயர்ந்து விட முடியாது. நாடகம் பார்க்க வந்து கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவனுக்குக் கேட்பது போல, எவன் வசனம் பேசுகிறானோ, அவன்தான் கெட்டிக்கார நடிகன், நவரச நடிகன் என்று அவர் சொன்ன விளக்கத்தின் படியே, என் புத்தகத்தைப் படிக்க எடுக்கிறவர்கள் எந்தத் தரத்தினராக இருந்தாலும், அவர்களுக்குப் புரியும் படி, எளிய தமிழில், புரியும் தமிழில் எழுத வேண்டும் என்றே முயற்சித்தேன்.