பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

11

தோற்ற வீரர் கூறுகிறார். “அந்த நடுவரின் குறுக்கீடுதான் தன் தோல்விக்குக் காரணம் என்று நான் நினைக்கவில்லை. என் ஆட்டத்தில் ஏதோ சில குறைகள் இருக்கின்றன. அவை என்னவென்று எனக்கே தெரியவில்லை. அவற்றை நான் கண்டுபிடித்து, திருத்திக்கொண்டு, எனது திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.”

அத்துடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை.

“தனது கடமையை தைரியமாக, பரிபூரணமாக நிறைவேற்றிய நடுவரை நான் வியந்து பாராட்டுகிறேன்.”

தோற்றவர்கள் எல்லோரும், நடுவர்களே தாங்கள் தோற்கக் காரணம் என்று கூறி, கடித்துக் குதறுவதையும், ஓட ஓட விரட்டுவதையும், பொல்லாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதையும் கேட்டுப் புளித்துப் போயிருந்த நமக்கு, சீன வீரரின் செம்மாந்த இதயமும் புரிகிறது. கடமை உணர்வுடன் பொழிந்த பண்பான வார்த்தைகளை கேட்கத் தேனாமிர்தமாக இனிக்கிறது.

நல்ல உடல் நல்ல மனம் என்பது தானே நல்லவர்கள் கொள்கை. இதைப் போன்ற பண்பான இதயத்தைத்தானே விளையாட்டுலகம் உருவாக்கித் தருகிறது என்கிறார்கள்.

அத்தகைய அருமையான இதயத்தை ‘இதுவன்றோ இதயம்’ என்று பாராட்டுகிறோம். விளையாட்டில் பங்கு பெறுகிற அனைவரும் இதுபோன்ற இதயம் பெற வாழ்த்துகிறோம். இறைவனை வணங்குகிறோம்.