பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா

81

அவனுக்கு அது 'தமாஷாக' இருந்தது. இவனும் கையசைத்துத்கொண்டே ஓடியது மேலும் பார்வையாளர்களுக்கு உற்சாகமாக இருக்கவே, தவறு செய்தவன் அதை மறைக்க முயன்று, தன்னையே வெற்றி வீரனாகவும் நினைத்துவிட்டான். "தமாஷ்' என்று நினைத்து செய்தேன். நான் முழு தூரத்தையும் ஓடவில்லை. பந்தய மைதானத்திற்குள்ளே வைத்திருந்த என் ஆடைகளை எடுத்து வரவே ஓடிவந்தேன். எல்லோரும் பாராட்டவே, நான் பேசாமல் இருந்து விட்டேன்.” என்று அவன் ஒத்துக்கொண்டான்.

தோற்றிருந்தாலும் தலைநிமிர்ந்து நடக்கவேண்டிய அவன், தலைகுனிந்து நடந்தான். கேலிப் பார்வையும் கிண்டல் பேச்சும் அவனைக்கூடவே தொடர்ந்து வந்தன. சரித்திரலே அவன் சாகாத இடத்தைப் பெற்று விட்டான்.

ஆமாம்! குறுக்கு வழியில் புகழ்பெற முயன்றால், கேலிக்கும் கிண்டலுக்கும் அவமானத்திற்கும் ஆளாக நேரிடும். என்ற பொன்மொழிக்கு சான்றாக அல்லவா நின்று விட்டான்.

அவன் பெயர் பிரட்லார்ஸ்(FRED LORZ.) 1904ஆம் ஆண்டு செயின்ட் லூயிஸ் எனும் இடத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில்தான் இந்த அமெரிக்க வீரன் பிரட் தவறு செய்தான். தெரிந்தும் செய்த தவறுக்கு அவன் பெற்ற தண்டனை - காலமெல்லாம் அவன் எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளக்கூடாது என்பதுதான்.

சிறிது காலம் கழித்து அத்தண்டனை மாறிப் போனாலும், அவன் பெற்ற அவமானம் மாறுமா? மறையுமா? நேர்மை வழியில் செல்பவரே, எல்லோருடைய நெஞ்சிலும் நிலைத்து நிற்கமுடியும்!