பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



15


பங்கு பெற்றவர்கள், பாங்குடன் வெற்றி பெற்றவர் கள், பலராலும் பாராட்டப்பட்டவர்கள் என்பதற்கு எள்ளளவும் ஐயமின்றி, ஆதாரங்களுடன் பல குறிப்புக் கள் ஆங்காங்கே காணப்படுவதும் உண்மை தான். ஆனால், வாழ்க்கையிலே உண்மையில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளை வருணிக்கும் பொழுது, நம் நாட்டில் உலவும் புராணநாயகர்களான அர்ச்சுனன், பீமன், கர்ணன், இராமன், கண்ணன் போன்றவர்களையும் மிஞ்சிப் போய் விடுகின்ற அளவில் தான் இந்தவீரக் கதைகள் அமைந்திருக்கின்றன.

ஆகவே தான், விளையாட்டு உலகில் வளமாக வாழ்ந்த வீரர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை, வீரக் கதைகள் என்ற தலைப்பிலே வடித்துத் தந்துள்ளேன். இக் கதைகளிலே வரும் இனிய அவ் வீரர்கள், தங்கள் தேகத்தை எந்த அளவில் தரமும் திறமும் உள்ளன வாக வளர்த்துக் கொண்டிருந்தனர் என்ற ஒரு கனிவான உண்மைதான் நம்மைக் களிப்பில் ஆழ்த்தும். வலிமையையும் திறமையையும் அவர்கள் பொல் லாத செயலுக்குப் புறம் போக்கிவிடாமல், நல்லவை களைக் காக்க, நாட்டுக்கு உழைக்க அவர்கள் எவ்வாறு பயன் படுத்திப் புகழ் பெற்ருர்கள் என்ற பேருண் மையை நாம் அறியும்போது, அவர்களின் செம்மாந்த வாழ்வின் நோக்கம் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும். "சக்தி ஒருவரது தேகத்தில் மிக மிக, பக்தியும் பண் பாடும் மிகுதியாகும்’ என்பது பெரியோர்களின் கருத் தாகும். அத்தகைய பேருண்மையை வெளிப்படுத்தும் சான்றுக் கர்த்தாக்களாக அமைகின்ற வீரர்களின் கதையை அறிவதின் மூலம், புத்துணர்ச்சியும் பேரின்ப எழுச்சியும் பெறுவோம் என்ற எண்ணத் தில், இனி வீரர்கள் உலகைக் காண்போம் வாருங்கள்!