பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
35

இனம் தனது மறுமலர்ச்சிக்காகவே தோற்றுவித்துக் கொண்ட ஒரு மாபெரும் துணையாகும், சாதனமாகும் என்ற ஓர் ஒத்த கருத்தினையே உலகுக்கு உணர்த்தினர்.

ஒருவருக்கொருவர் உள்ளத்தால், உணர்வால், செயலால், சொல்லால் ஒன்றுபடக்கூடிய உன்னத நிலைக்கு இட்டுச் செல்லும் ஏற்றமிகு நிலையைத்தான் விளையாட்டு என்று பெயரிட்டு அழைத்து மகிழ்கின்றனர்.

இரத்தத்திமிர் பிடித்தவர்களே விளையாடுகின்றனர் என்றும், வேலையற்ற சோம்பேறிகளே விளையாடிப்பொழுதைக் கழிக்கின்றனர் என்றும், விளையாட்டு முரட்டுத்தனத்திற்கும், முட்டாள் குணத்திற்கும் வழிகாட்டுகிறது என்றும், அறிவுக் கூர்மையை அழித்து, அலட்சிய மனப்போக்கினை விளைவித்து.ஒருவருடைய வாழ்க்கையை வீணாக்கி விடுகிறது என்றும் வரட்டுத்தனமாக விவாதிப்போரும் உண்டு.

குறை கூறியும், குற்றஞ்சாட்டியும், குதர்க்கமாகப் பேசியும் விளையாட்டைத் தாங்கள் வெறுத்தது போலவே, மற்றவர்களையும் ஈடுபடாமல் தடுப்பதில் மோகங்கொண்ட மூளையற்ற மனிதர்கள், தங்கள் முயற்சியில் இதுவரை வெற்றி கண்டார்களா என்றால் அது தான் இல்லை.

சித்தம் கவரும் தத்துவம்

பொய்யும் புனை சுருட்டும், வஞ்சக வாதமும், விளையாட்டை வீழ்த்தவே முடியவில்லை. காரணம் என்ன? அதன் தத்துவம்தான். விளையாட்டின் தத்துவமே மனிதனை மனிதனாக வாழச் செய்வதுதான்.

குறையுடையவன்தான் மனிதன். தவறு செய்வது மனித குணம் என்று மனிதரைப் பற்றி விமர்சிப்பதும் உண்டு.